வதந்தி – விமர்சனம்
03 Dec 2022
‘சுழல்’ இணையத் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி தயாரித்துள்ள இணையத் தொடர் ‘வதந்தி’.
ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், சைமன் கே கிங் இசையமைப்பில், எஸ்ஜே சூர்யா, சஞ்சனா, லைலா, நாசர், விவேக் பிரசன்னா, ஸ்முருதி வெங்கட், ஹரீஷ் பெராடி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இணையத் தொடர்களில் பெரும்பாலும் த்ரில்லர் கதைகளுக்குத்தான் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதற்கேற்றபடி ஒரு பரபரப்பான த்ரில்லர் கதையைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ். எட்டு அத்தியாயங்கள் கொண்ட தொடரில் ஆரம்பம் முதல் கடைசி வரை தொடரின் மையமான அந்த சஸ்பென்ஸை யூகிக்க முடியாதபடி கொடுத்திருக்கிறார்.
கன்னியாகுமரியில் வசிக்கும் ஆங்கிலோ இந்தியர் லைலா. கணவரை இழந்த அவருக்கு சஞ்சனா ஒரே மகள். ஒரு மேன்ஷனை நடத்திக் கொண்டிருக்கிறார் லைலா. ஆண், பெண் பேதமில்லாமல் அனைவரிடத்திலும் அன்புடன் பழகும் சஞ்சனா ஒரு நாள் திடீரென கொல்லப்படுகிறார். அந்தக் கொலையை விசாரிக்கும் பொறுப்பு சப் இன்ஸ்பெக்டரான எஸ்ஜே சூர்யாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. எந்த ஒரு விசாரணையையும் சீக்கிரத்தில் முடிக்கும் திறமைசாலியான சூர்யாவுக்கு இந்த கொலை வழக்கு விசாரணை பெரும் சவாலைக் கொடுக்கிறது. இரண்டு வருட விசாரணையில் மட்டுமே அவரால் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடிகிறது. இடையில் மேலதிகாரிகளின் அழுத்தம், குடும்பப் பிரச்சினை என அனைத்தையும் சமாளித்து விசாரணையை முடிக்கிறார். சஞ்சனாவின் கொலைக்கு யார் காரணம் என்பதையும் கண்டுபிடிக்கிறார். அந்த குற்றவாளி யார் ? என்பதுதான் எதிர்பாராத மிகப் பெரும் சஸ்பென்ஸ்.
‘மாநாடு’ படத்தில் டெபுடி போலீஸ் கமிஷனராக மிரட்டி ரசிகர்களைக் கவர்ந்தவர் எஸ்ஜே சூர்யா. இந்தப் படத்தில் சப் இன்ஸ்பெக்டராக நடித்து மொத்த தொடரையும் தாங்கிப் பிடிக்கிறார். விசாரணையில் அவர் இறங்கிய பின் சூடு பறக்கிறது. போலீஸ் வேலையில் இருப்பவர்களுக்கு குடும்பத்தைக் கவனிக்க முடியாத அழுத்தம் ஒரு பக்கம், மேலதிகாரிகள் தரும் அழுத்தம் மற்றொரு பக்கம், விசாரணை இழுப்பது இன்னொரு பக்கம் என பல சவால்களைக் கடக்கும் ஒரு கதாபாத்திரம். ஒரு திரைப்படத்தில் கூட இந்த அளவிற்கு நடிப்பதற்கான ஸ்கோப் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இத் தொடரில் ஒரு திரைப்படத்தை விடவும் பலதரப்பட்ட பாவங்களை வெளிப்படுத்தக் கூடிய ஒரு கதாபாத்திரம். எட்டு அத்தியாயங்களிலும் சூர்யாவின் பங்களிப்பு சூப்பர்.
கதையின் நாயகி ‘வெலோனி’ கதாபாத்திரத்தில் சஞ்சனா. சின்னச்சின்ன முகபாவங்களில் கூட தனி முத்திரை பதிக்கிறார். அதெல்லாம் இயக்குனர் சொல்லிக் கொடுத்து வருவதை விட அவருக்குள்ளேயே இருக்கும் ஒரு திறமையாகவே தெரிகிறது. அதிலும் குறிப்பாக நாசரிடம் அவர் பேசும் காட்சிகள் சிம்ப்ளி சூப்பர்ப். சினிமாவில் கூட இது போன்ற திறமைசாலிகளைத் தேடிப் பிடித்து நடிக்க வைக்க மாட்டார்கள். ஆனால், இத்தொடருக்காக அவரைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்தவர்களுக்கு தனி பாராட்டுக்கள். ‘வெலோனி, வேற லெவல் நீ(ங்க)’ என்று பாராட்ட வைக்கிறார்.
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சிரிப்பழகி எனப் பெயரெடுத்தவர் லைலா. அவருக்குள் இப்படி ஒரு நடிப்புத் திறமை ஒளிந்திருக்கிறதா என்று ஆச்சரியப்பட வைக்கிறார். எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும் சுட்டிப் பெண்ணாக, காதலியாகத்தான் அவரைத் திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், இத்தொடரில் அம்மா கதாபாத்திரமாக இருந்தாலும் லைலாவின் கதாபாத்திரம் ‘அம்மாடியோவ்’ கதாபாத்திரம். டீன் ஏஜ் வயதில் ஒரு பெண்ணை வைத்திருக்கும் எந்த ஒரு அம்மாவும் இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என நாம் நிஜ வாழ்க்கையில் பலரைப் பார்த்திருக்கிறோம். அப்படி ஒரு அம்மாவை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் லைலா.
எஸ்ஜே சூர்யாவுக்கு விசாரணையில் உதவி செய்யும் மற்றொரு சப் இன்ஸ்பெக்டராக விவேக் பிரசன்னா. போலீஸ் வட்டாரத்தில் எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் சக அதிகாரிக்கு உதவி செய்யும் இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் யதார்த்தமாய் ஸ்கோர் செய்கிறார் விவேக்.
எழுத்தாளராக நாசர். படத்தின் கதைக்கான முக்கிய திருப்புமுனை அவரிடம்தான் ஆரம்பமாகிறது. எஸ்ஜே சூர்யாவின் மனைவியாக ஸ்முருதி வெங்கட். இரவு, பகல் பாராமல் குடும்பத்திற்காகவும் நேரத்தை செலவிடாமல் வேலை, வேலை என இருக்கும் ஒரு சப்இன்ஸ்பெக்டரின் மனைவியாக, அடிக்கடி சண்டை போட்டுக் கோபித்துக் கொள்பவராக அனுதாபப்பட வைக்கிறார். சஞ்சனாவுக்காக நிச்சயிக்கப்பட்டவராக குமரன், சூர்யாவுக்காக எந்த விதமான உதவியையும் எந்த நேரத்திலும் செய்யும் அலெக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘அருவி’ பாலாஜி கவனம் ஈர்க்கிறார்கள்.
பத்திரிகை எடிட்டராக ஹரிஷ் பெரடி கதாபாத்திரம், மற்றும் அரசியல்வாதிகள் கதாபாத்திரம் கதையில் தேவையில்லாதவை என்றே தோன்றுகிறது. சில ஐடி கம்பெனியில் சிலர் இந்த வழக்கு விசாரணை பற்றி பேசிக் கொண்டிருப்பதும் தொடரில் ஒட்டாமல் தனித்து நிற்கிறது. அவற்றைத் தவிர்த்திருந்தால் விறுவிறுப்புக்கு ஒரு வேகத் தடை வந்திருக்காது. மூன்று அண்ணன், தம்பிகள்தான் தொடரின் வில்லன்கள், அவர்களுடைய அம்மாவாக குலபுலி லீலா. காட்டுக்கு நடுவே அவர்கள் வசிக்கும் இடமும், அவர்களும் நிறையவே பயமுறுத்துகிறார்கள்.
சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவு இயற்கை எழில் சூழ்ந்த கன்னியாகுமரியின் அழகை அருமையாய் பதிவு செய்துள்ளது. காட்டிற்கு நடுவில் படமாக்கப்பட்டுள்ள காட்சிகள் விஷுவலாகவும் பயத்தை ஏற்படுத்துகின்றன. சைமன் கே கிங் பின்னணி இசை தொடரின் வேகத்தை விறுவிறுப்புடன் கூட்டியிருக்கிறது.
ஓடிடிக்களில் ஆங்கிலத் தொடர்கள்தான் தரமானவை என்று சில ஓடிடி ரசிகர்கள் சொல்வார்கள். அவற்றிற்கு சிறிதும் சளைத்தது அல்ல இம்மாதிரியான தமிழ்த் தொடர்கள் என தாராளமாகச் சொல்லலாம்.
Tags: Vadhandhi, Andrew Louis, Simon K King, SJ Suryah, Sanjana, Laila, Nasser, Vivek Prasanna, Hareesh Peradi, Smruthi Venkat,