தீபக் இயக்கத்தில், ரமேஷ் தமிழ்மணி இசையமைப்பில், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோகிணி, சண்முக ராஜா மற்றும் பலர் நடிப்பில் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘விட்னஸ்’.
சாமானிய மக்கள் அவர்களது நீதிக்காக எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர் தீபக். யதார்த்தமான கதைக்களம், அதற்கான நட்சத்திரத் தேர்வு என ஒரு பெண்ணின் போராட்டத்தை நம் கண்முன் அப்படியே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.
சென்னை மாநகராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாக இருப்பவர் ரோகிணி. அவருடைய மகன் ஒரு அபார்ட்மென்ட்டில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யச் சென்ற போது இறந்து போகிறார். தனது ஒரே மகனை பறி கொடுத்த ரோகிணி, மகன் மரணத்திற்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து போராடுகிறார். அவருக்கு உரிய நீதி கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் யதார்த்தமான நடிப்பால் கவர்பவர் ரோகிணி. கணவரைப் பறி கொடுத்து, வளர்ந்து இளைஞனாக, கனவு கண்ட வாழ்க்கையை ஆரம்பிக்கும் நேரத்தில் மகனைப் பறி கொடுத்து கலங்கிப் போய் நிற்கிறார். இப்படி ஒரு சோதனையை, பிரச்சினையை எதிர் கொள்ளும் ஒரு ஏழைப் பெண்ணாக அந்தக் கதாபாத்திரத்தில் காட்சிக்குக் காட்சி நம்மை கலங்க வைக்கிறார் ரோகிணி.
ரோகிணிக்கு உதவி செய்யும் பெண்ணாக ஷ்ரத்தா ஸ்ரீநாத். அவர் வசிக்கும் அபார்ட்டிமெண்ட்டில்தான் ரோகிணியின் மகன் இறந்து போகிறார். அது மட்டுமல்ல ஒரு சந்தர்ப்பத்தில் நீச்சல் வீரரான ரோகிணியின் மகன் தான் நீச்சல் குளத்தில் சிக்கித் தவித்த ஷ்ரத்தாவின் உயிரைக் காப்பாற்றியவர். அதனால், ரோகிணிக்கு அவராகவே முன் வந்து உதவி செய்கிறார். அந்த அபார்ட்மெண்ட்டில் அவருக்கு எதிராக உள்ள அபார்ட்மென்ட் சங்க நிர்வாகிகளை துணிச்சலுடன் எதிர்க்கிறார்.
ரோகிணிக்காக வாதாடும் வக்கீலாக சண்முகராஜன். அவருடைய நீதிமன்ற வாதம் ஆணித்தரமாக அமைந்து நீதி கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. ரோகிணிக்கு ஆதரவாக இருக்கும் தோழராக செல்வா, அவருடைய மனைவியாக நடித்திருக்கும் சுபத்ரா ராபர்ட் மனதில் இடம் பிடிக்கிறார்கள். சில காட்சிகள் வந்தாலும் அழகம் பெருமாள், ஸ்ரீநாத் அவரவரர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.
படத்திற்கான வசனங்கள் பல இடங்களில் கவனம் பெறுகிறது. இயக்குனரே ஒளிப்பதிவாளர் என்பதால் அவருடைய எண்ணங்களை காட்சிப் பதிவிலும் பதிவு செய்திருக்கிறார். சென்னையின் தெருக்களை உள்ளது உள்ளபடி இயல்பாய் படமாக்கியிருக்கிறார். ரமேஷ் தமிழ்மணியின் இசை, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு, சதீஷ் கலை இயக்கம் படத்திற்கு பக்கபலமாய் அமைந்திருக்கிறது.
இம்மாதிரியான சமூக அக்கறை உள்ள படங்கள் தமிழ் சினிமாவில் அடிக்கடி வர வேண்டும். சில சட்ட வழிமுறைகளையும், ஒரு விழிப்புணர்வையும் இந்த மாதிரிப் படங்கள்தான் ஏற்படுத்த முடியும்.