சுராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், வடிவேலு, ஆனந்தராஜ், ராவ் ரமேஷ், ஷிவானி, ஷிவாங்கி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’.
சுராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த ‘மருதமலை, தலைநகரம்’ ஆகிய படங்களில் வடிவேலுவின் நகைச்சுவை தான் அந்தப் படங்களை ரசிகர்களிடம் அதிகமாகக் கொண்டு போய் சேர்த்தது. ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக வருவதால் சுராஜ் இயக்கத்தில் ‘ரிட்டர்ன்’ ஆகலாம் என வடிவேலு யோசித்திருக்கிறார். வடிவேலுவுக்கும் பொருந்தும் விதமான கதைதான் படத்தில் உள்ளது. அதே சமயம், ரசிகர்கள் எதிர்பார்த்த நகைச்சுவையை இன்னும் அதிகமாகக் கொடுத்திருக்கலாம்.
நாய்களை கடத்தி வந்து அதன் மூலம் பணத்தைப் பெற்று நாய்க் கடத்தல் தொழில் செய்து வருபவர் வடிவேலு. அவர்களது குடும்பத்திற்குச் சொந்தமான அதிர்ஷ்ட நாய் ஒன்று பல வருடங்களுக்கு முன்னர் அதைப் பராமரிக்க வந்தவரால் கடத்தப்பட்ட விஷயத்தை பாட்டி சொல்ல தெரிந்து கொள்கிறார் வடிவேலு. பின்பு தங்களுக்குச் சொந்தமான அந்த அதிர்ஷ்டக்கார நாயை மீட்டு வர ஹைதராபாத் செல்கிறார். அதில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
வடிவேலு அவருடைய வழக்கமான உடல் மொழி, விதவிதமான தோற்றம் என அதே எனர்ஜியுடன் இருக்கிறார். படம் முழுவதும் சிரிக்க வைப்பார் என்று எதிர்பார்த்து வந்தவர்களுக்குக் கொஞ்சம் ஏமாற்றத்தைத் தருகிறார். சில காட்சிகளில் மட்டுமே சிரிப்பு வருகிறது. சிரிப்புக்கான இடங்கள் பல இருந்தும் அந்த இடங்களில் அதற்குரிய வசனங்கள் அமையவில்லை என்பது ஒரு குறையே.
வடிவேலுவுக்கு அடுத்து படத்தில் வில்லன்களுக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள். ஆனந்தராஜ் நகைச்சுவை கலந்த வில்லனாக வந்து கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். இடைவேளைக்குப் பிறகு சீரியஸ் வில்லனாக ராவ் ரமேஷ் வருகிறார். அவருடைய தங்கையாக நடித்திருக்கும் ஷிவானி, கிளாமர் காட்டி நடித்திருக்கிறார்.
வடிவேலுவின் உதவியாளர்களாக நடித்திருப்பவர்களில் ரெடின் கிங்ஸ்லி மட்டும் படம் முழுவதும் வருகிறார். இடைவேளை வரை பிரசாந்த், ஷிவாங்கி வருகிறார்கள். அதற்குப் பின் மாறன் அவர்களது இடத்தை நிரப்புகிறார்.
சந்தோஷ் நாராயணன் இசையில் வடிவேலு பாடிய பாடல்கள் சுவாரசியமாய் அமைந்து ரசிக்க வைக்கின்றன.
வடிவேலு மீண்டும் வந்துவிட்டார் என்பதே அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான். இன்னும் கூடுதல் நகைச்சுவை காட்சிகள் படத்தில் இருந்திருந்தால் இரட்டை மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.