ரிஷிகா சர்மா இயக்கத்தில், நிஹால், அனந்த் நாக், சிரி பிரஹலாத், பாரத் போபனா மற்றும் பலர் நடிப்பில் கன்னடத்தில் தயாராகி தமிழில் டப்பிங் ஆகி வெளிவந்துள்ள படம் ‘விஜயானந்த்’.

கர்நாடகாவில் விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் என்ற டிரான்ஸ்போர்ட் கம்பெனியை ஆரம்பித்து இன்று நாடு முழுவதும் அதன் சேவையைப் பரப்பியுள்ள விஜய் சங்கேஷ்வர் என்ற தொழிலதிபரின் வாழ்க்கை வரலாற்றுப் படம்தான் இந்த ‘விஜயானந்த்’.

வட கர்நாடகாவில் உள்ள கதக் என்ற ஊரில் தனது அப்பா நிர்வகித்து வந்த பிரிண்டிங் பிரஸ் தொழிலை விட்டு சொந்தமாக ஒரு லாரி வாங்கி டிரான்ஸ்போர்ட் தொழிலில் இறங்குகிறார் விஜய். அந்த ஒரு லாரி இன்று ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகளாக வளர்ந்து நிற்கிறது. அவரது போராட்டம், உழைப்பு, வளர்ச்சி ஆகியவற்றைச் சொல்லும் கதையாக இப்படத்தைத் தந்திருக்கிறார்கள்.

டிரான்ஸ்போர்ட் மட்டுமல்லாது பத்திரிகைத் துறையில் இறங்கி நாளிதழ் ஒன்றை ஆரம்பித்து அதை நம்பர் 1 இடத்திற்குக் கொண்டு வந்த சாதனையும் படத்தில் இடம் பெறுகிறது. நம்பிக்கையுடன் உழைத்தால் ஒருவர் எவ்வளவு உயரத்தை வேண்டுமானாலும் அடையாளம் எனச் சொல்லும் படம்.

1960களிலிருந்து இன்றைய காலகட்டம் வரை நடக்கும் கதை. அந்தந்த கால கட்டங்களை கண்முன் கொண்டு வருவதில் இயக்குனர் ரிஷிகா சர்மா  மற்றும் அவரது குழுவினர் நன்றாகவே உழைத்திருக்கிறார்கள்.

விஜய் சங்கேஷ்வர் ஆக மிகையில்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார் நிஹால். பயோபிக் படங்களில் நடிக்கும் போது உண்மைக்கு அருகில் கதாபாத்திரத் தேர்வும், அதற்கான நடிகர்களின் நடிப்பும் இருக்க வேண்டும். இந்தப் படத்தில் அனைத்து கதாபாத்திரங்களிலும் அதைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். நிஹாலுக்குப் பிறகு அவரது அப்பாவாக நடித்த அனந்த் நாக் நம் மனதில் இடம் பிடிக்கிறார். படம் முழுவதும் விஜய் சங்கேஷ்வர் கதாபாத்திரத்தை மட்டுமே சுற்றி வருவதால் மற்ற கதாபாத்திரங்களுக்கான முக்கியத்துவம் குறைந்துள்ளது. 

சிரி பிரஹலாத், வினய பிரசாத், பாரத் போபனா, ரவிச்சந்திரன் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள். 

எமோஷனலான காட்சிகளில் கோபி சுந்தரின் பின்னணி இசை அதை இன்னும் அதிகப்படுத்துகிறது. கீர்த்தன் பூஜாரியின் ஒளிப்பதிவில் அந்தக் கால கர்நாடகா பகுதிகள் இயல்பாய் பதிவாகியுள்ளது.

விஜய் சங்கேஷ்வரின் டிரான்ஸ்போர்ட் தொழிலைப் பற்றிய காட்சிகள் படத்தில் அதிகம் இடம் பெற்றுள்ளது. அவருடைய அரசியல் பயணம், பத்திரிகைத் தொழிலில் இறங்கியது ஆகியவை குறைவாகவே இடம் பெற்றுள்ளன. அதோடு அவர் சந்தித்த சில சிக்கல்களை மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளார் இயக்குனர். ஒரு சினிமாவுக்குரிய திரைக்கதையாக விறுவிறுப்பு பரபரப்புடன் அமைந்திருந்தால் இன்னும் சுவாரசியமாக ரசித்திருக்க முடியும்.