சந்தோஷ் ராஜன் இயக்கத்தில், ஜீவா, காஷ்மீரா பர்தேஷி, பிரக்யா நக்ரா, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம்.

கேரளாவிலிருந்து கோயம்பத்தூர் வந்து செட்டிலான மலையாளக் குடும்பத்துப் பெண்ணான காஷ்மீராவை, வேலை வெட்டி இல்லாத ஜீவா காதலிக்கிறார். அதற்கு பெண்ணின் அப்பாவிடம் இருந்து கடும் எதிர்ப்பு வருகிறது. அதை மீறி ஜீவா காதலியைக் கல்யாணம் செய்து கொண்டாரா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் காதல் கதைளில் மிகவும் பழமையான ஒரு கதையை, காமக் காட்சிகள் பல கலந்து கொடுத்து குறிப்பிட்ட இளம் ரசிகர்களை மட்டும் கவர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் ராஜன். எந்தவிதமான திருப்புமுனையும் இல்லாமல் எதையெதையோ காட்சிகளாக வைத்து படத்தை நகர்த்தியிருக்கிறார்கள்.

‘சிவா மனசுல சக்தி’ படம் போல ஒரு ஜாலியான படம் பண்ண வேண்டும் என்று ஜீவா ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், அந்த ஜாலியை இயக்குனர் வரம்பு மீறி கொடுத்ததைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை. இதையும் இந்தக் கால ரசிகர்கள் ரசிப்பார்கள் என விட்டுவிட்டார். 

படத்தில் இரண்டு கதாநாயகிகள். அக்கா காஷ்மீரா கதாபாத்திரத்தை அடக்க, ஒடுக்கமாகக் காட்டிய இயக்குனர், தங்கை பிரக்யா கதாபாத்திரத்தை ரொம்பவே கிளாமராகக் காட்டிவிட்டார். அதிலும் ஜீவா பின்னால் பிரக்யா அவ்வளவு காதலுடன் துரத்துகிறார் என்பதெல்லாம் ரொம்பவே ஓவர்.

விடிவி கணேஷ் படம் முழுவதும் ஜீவாவின் நண்பனாக வருகிறார். அவருடைய காட்சிகள் அனைத்தும் சென்சாரில் எப்படி தப்பித்தது என்பது ஆச்சரியம்தான். ஜீவாவை விட வயதில் குறைந்தவர்களை ஜீவாவின் நண்பர்களாக ஒரு சில காட்சிகளில் மட்டும் காட்டும் இயக்குனர், ஜீவாவை விட வயதான விடிவி கணேஷை படம் முழுவதும் காட்டி முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

இரண்டு தெரு, இரண்டு வீடு ஆகியவற்றுடன் படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள். தமிழில் கடந்த சில வருடங்களில் ‘அடல்ட் காமெடி’ படம் கொடுத்தவர்கள் கூட அவர்களது ரூட்டை மாற்றிவிட்டார்கள். இந்தப் படத்தை தியேட்டர்களில் வெளியிட்டதற்குப் பதில் ஓடிடி பக்கம் சென்றிருந்தால் நல்ல விலைக்குப் போய் இருக்கும்.