கே.பி.தனசேகர் இயக்கத்தில், நட்ராஜ், ராம்கி, பூனம் பஜ்வா மற்றும் பலர் நடித்துள்ள படம்.

கடமை தவறாத போலீஸ் இன்ஸ்பெக்டரான நட்ராஜ் ஊட்டிக்கு மாற்றலாகி வருகிறார். ஊட்டியில் பிரபலமான பணக்காரரான ராம்கி அவரது காரில் ஐந்து கோடி ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு சென்ற போது அது காணாமல் போகிறது. அந்தப் பணத்தை ஒருவர் திருடினாலும், அது ஒருவர் மாறி மற்றொருவரால் திருடப்பட்டு கை மாறிக் கொண்டே செல்கிறது. அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் நட்ராஜ். கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் மீதிக் கதை.

போலீஸ் கதைகள் பலவற்றைப் பார்த்திருக்கிறோம். அவையனைத்தும் ஆக்ஷன் கலந்தவையாக மட்டுமே இருக்கும். இந்தப் படத்தில் பணத் திருட்டு, அதைச் சுற்றி நடக்கும் குற்றங்கள் என திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார்கள். இன்னும் விறுவிறுப்பாகவும், மேக்கிங்கில் தரமாகவும் கொடுத்திருந்தால் ரசிக்கும்படியான படமாக அமைந்திருக்கும்.

கடமை தவறாத இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் பொருத்தமாகவே நடித்திருக்கிறார் நட்ராஜ். அவருடைய அதிகாரத் தோரணையும்,  அதற்கான தெளிவான கணீர் குரலும் அவருக்கு பலமாக அமைந்திருக்கிறது. 

நட்ராஜ் ஜோடியாக நடித்துள்ள பூனம் பஜ்வாவிற்கு சில காட்சிகளைத் தவிர பெரிய வேலையில்லை. அது போலவே ராம்கியும் சும்மா வந்து போகிறார்.

நட்ராஜ் உடன் பயணிக்கும் காவலர்களான ரவி மரியா, மனோபாலா காமெடி என்ற பெயரில் நம்மை சோதிக்கிறார்கள். மொட்டை ராஜேந்திரன், சஞ்சிதா, அஸ்மிதா சம்பந்தப்பட்ட காட்சிகள் ‘சி’ சென்டர் ரசிகர்களுக்காச் சேர்த்திருக்கிறார்கள்.

எப்படியெப்படியோ கதையை நகர்த்திவிட்டு கிளைமாக்சில் எல்லாரும் ‘முறையாக வரி கட்டுங்கள்’ என்ற அட்வைஸுடன் முடித்திருக்கிறார்கள்.