கனெக்ட் – விமர்சனம்

22 Dec 2022

இடைவேளை இல்லாமல் 99 நிமிடங்கள் மட்டுமே ஓடக் கூடிய ஒரு திரைப்படம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில் மீண்டும் நடித்திருக்கிறார் நயன்தாரா.

கொரானோ ஆரம்ப காலத்தில் தனது டாக்டர் கணவரை இழக்கிறார் நயன்தாரா. அப்பாவின் திடீர் மரணத்தால் பாதிக்கப்படும் அவர்களின் மகள் ஹனியா நபீசா அப்பாவுடன் பேச ஆசைப்பட்டு ஆவியுடன் பேசும் முறை ஒன்றை செய்கிறார். ஆனால், அப்பாவின் ஆவிக்குப் பதிலாக வேறு ஒரு கெட்ட ஆவி வந்துவிடுகிறது. அது ஹனியா நபீசாவுக்குள் புகுந்து அவரை தவிக்கவிடுகிறது. மகளின் நிலையைக் கண்டு கலக்கமடையும் நயன்தாரா, அந்த கெட்ட ஆவியை விரட்ட பாதிரியார் உதவியை நாடுகிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நயன்தாராவின் வீட்டிற்குள்ளேயே பெரும்பாலும் சுற்றி வரும் காட்சிகள். கிளைமாக்சுக்கு முன்பாக மட்டும் பேயை விரட்டும் பாதிரியார் சம்பந்தப்பட்ட காட்சிகளும், மகள் நயன்தாராவிற்கு உதவியாக வரும் அப்பா சத்யராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகளும் திரைக்கதையில் இணைகின்றன. படம் முழுவதுமே வீடியோ காலிங் முறையில் அனைவருமே கேமராவைப் பார்த்து மட்டுமே பேசிக் கொள்வது வித்தியாசமாக உள்ளது.

மகள் ஹனியா பேயின் பிடியிலிருந்து நலமாகத் திரும்ப வேண்டும் என அம்மா பாசத்தை வெளிப்படுத்தும் நயன்தாரா, மகள் நயன்தாரா அந்த பிரச்சினையிலிருந்து மீள வேண்டும் என அப்பா பாசத்தை வெளிப்படுத்தும் நயன்தாரா, அவர்கள் அனைவருமே நிம்மதியாக இருக்க வேண்டும் என தனக்கு வரும் பிரச்சினைகளைச் சமாளிக்கும் பாதிரியார் அனுபம் கேர் ஆகியோரின் நடிப்பில் அவர்களது அனுபவம் தெரிகிறது.

ஹனியா நபீசாவை அந்த கெட்ட ஆவி ஏன் பிடிக்கிறது என்பதற்கு ஒரு காரணத்தை வைத்திருந்தால் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும். இடைவேளை இல்லாமல் ஒன்றரை மணி நேரத்தில் ஒரு பரபரப்பான படத்தைக் கொடுத்து வியப்பூட்டுகிறார் இயக்குனர் அஷ்வின் சரவணன்.

Tags: connect, ashwin saravanan, nayanthara, vignesh sivan

Share via:

Movies Released On April 12