எஸ்பி, டிஎஸ்பி, கமிஷனர், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரங்களை வைத்து பல ஆக்ஷன் கதைகளைப் பார்த்த தமிழ் சினிமா ஒரு கான்ஸ்டபிளின் அதிரடி ஆக்ஷன் கதையைப் பார்ப்பது ஆச்சரியம்தான். ஒரு சாதாரண கான்ஸ்டபிள் மூளை பலத்துடன் எதிரிகளை எப்படிப் பந்தாட முடியும் என்பதை ஒரு பரபர ஆக்ஷனுடன் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் வினோத்குமார்.

சென்னை, நீலாங்கரை காவல் நிலையத்தில் ஒரு சாதாரண கான்ஸ்டபிள் விஷால். தற்காலிக பணி நீக்கத்திற்குப் பிறகு மீண்டும் பணியில் சேர்கிறார். சென்னையை மிரட்டும் ஒரு தாதாவின் மகனான ரமணாவை தனது லத்தியால் ‘லாடம்’ கட்டுகிறார். அதனால், ஆத்திரமடையும் ரமணா, விஷாலைக் கொல்ல முயற்சிக்கிறார். அதற்காக ‘ஸ்கெட்ச்’ம் போடப்படுகிறது. புதிதாக கட்டப்பட்டு வரும் பல அடுக்குமாடி கட்டிடத்தில் விஷால், ரமணா நேருக்கு நேர் மோதும் சூழல் வருகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இது மாதிரியான கதாபாத்திரம் விஷாலுக்கு பழகிப் போன ஒன்று. சென்டிமென்ட், ஆக்ஷன் என இரண்டிலும் ஈஸியாக ஸ்கோர் செய்கிறார். அதிலும் கிளைமாக்சில் தனது மகனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என கலங்கும் காட்சியில் ரசிகைகளின் மனதில் இடம் பிடிப்பார். அவ்வளவு ரவுடிகளை தனியாளாக எதிர் கொள்ளும் ஆக்ஷன் காட்சிகள் அதிரடியானவை.

விஷாலின் மனைவியாக கொஞ்ச நேரமே வந்து போனாலும் மனதில் இடம் பிடிக்கிறார் சுனைனா. விஷால் மீது கொலை வெறியுடன் இருக்கும் ரமணா வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். அவரது அப்பாவாக புதுமுகம் சன்னி, யார் இவர் எனக் கேட்க வைக்கிறார்.

யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும், பீட்டர் ஹெய்னின் சண்டைப் பயிற்சியும் படத்திற்கு பெரும் பிளஸ் பாயின்ட்டாக அமைந்துள்ளன.

இரண்டாம் பாதியில் விஷாலுக்கும், ரமணாவுக்கும் இடையிலான ஏட்டிக்குப் போட்டி ஒரே ஒரு கட்டிடத்தில் நகர்வது மட்டும் மைனஸாக உள்ளது. அதில் வேறு சில காட்சிகள் இடம் பெற்றிருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.