என்ஜாய் – விமர்சனம்

24 Dec 2022

தமிழ் சினிமாவில் எப்போதோ ஒரு முறைதான் ‘அடல்ட்’ காமெடி படங்கள் வெளிவரும். ஒரு இடைவெளிக்குப் பிறகு வந்துள்ள படம். கண்டிப்பாக 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் படத்தைப் பார்க்க வேண்டும்.

இயக்குனர் பெருமாள் காசி சில பல இரட்டை அர்த்த வசனங்களுடன் கூடிய காதல் கதையைக் கொடுத்திருக்கிறார்கள். பகட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விடக் கூடாது என்ற கருத்தை சொல்லியிருக்கும் படம்.

மதன் குமார், விக்னேஷ், ஹரிஷ் மூவரும் நண்பர்கள், ஒன்றாகத் தங்கியிருக்கிறார்கள். ஜிவி அபர்ணா, சாருமிசா, நிரஞ்சனா சிறிய ஊர்களிலிருந்து சென்னைக்கு படிக்க வருகிறார்கள். வந்த இடத்தில் வசதியாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் பணத்திற்காக வீக் என்ட் பார்ட்டிகளில் கலந்து கொள்ள கொடைக்கானல் செல்கிறார்கள். சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அவர்களை மதன் குமார் மற்றும் நண்பர்கள் காப்பாற்ற முயல்கிறார்கள். அதன் பின் என்ன நடக்கிறது என்பது படத்தின் மீதிக் கதை.

மதன், விக்னேஷ், ஹரிஷ், அபர்ணா, சாருமிசா, நிரஞ்சனா என இளைஞர்கள் சூழ்ந்த படமாக உள்ளது. அந்த வயதில் அவர்களுக்குள் இருக்கும் ஆசா, பாசங்கள் அவர்கள் சந்திக்கும் பிரச்சினகைள் ஆகியவற்றை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களில் இயல்பாக நடித்திருக்கிறார்கள். தனது ஜுனியர்களுக்கு தவறான ஒரு பாதையைக் காட்டுகிறார் சீனியர் ஹாசின். 

இரண்டரை மணி நேரப் படம் நகர்வது தெரியாமல் திரைக்கதை விறுவிறுப்பாக அமைந்துள்ளது. கொடைக்கானல் விடுதி சம்பந்தப்பட்ட வீக் என்ட் பார்ட்டி காட்சிகள் அதிர்ச்சியாக உள்ளது. இப்படியெல்லாம் தெரியாமல் இளம் பெண்கள் சிக்கிக் கொண்டால் அவர்கள் வாழ்க்கை என்னாவது என்ற ஒரு பாடத்தை இந்தப் படம் மூலம் உணர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

Tags: enjoy, perumal kasi, Madhan kumar, Vignesh, Harish kumar, Sai Dhanya, Niranjana Neithiar, G V Aparna, Sharumiishaa

Share via: