ஒன்றரை மணி நேரம் மட்டுமே ஓடும் படம். அடுத்தவர்களின் பணத்திற்காக ஆசைப்படுபவர்களின் வாழ்க்கை எப்படி அமைகிறது என்பதைச் சொல்லும் படம்.

இயக்குனர் வினோ, தேவையற்ற காட்சிகள் இல்லாமல் விறுவிறுப்புடன் ஒன்றரை மணி நேரத்தில் ஒரு படத்தை சுவாரசியமாகக் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். 

பிஎஸ்சி கெமிஸ்ட்ரி படித்து முடித்த ஸ்ரீ, ஒரு வீட்டில் உள்ள வயதானவருக்கு உதவி செய்யும் வேலைக்குச் செல்கிறார். வயதான ராம்ஜி ஒரு ஆராய்ச்சியாளர். அவர் கண்டுபிடித்து வைத்த ஒரு மருந்தை எடுத்து அதை விற்று பெரும் பணம் சேர்க்கிறார் ஸ்ரீ. அதே வீட்டில் வேலைக்காரியாக இருக்கும் வசுதா கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீ வசியப்படுத்தி தன் வலையில் வீழ்த்துகிறார். தனது கள்ளக் காதலுடன் சேர்ந்து ஸ்ரீ--யைத் தாக்கி அவரிடமிருந்து பணத்தை எடுத்துச் செல்ல முயற்சிக்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஸ்ரீ, வசுதா கிருஷ்ணமூர்த்தி, ராம்ஜி, சாம்ஸ் ஆகிய நால்வருக்கிடையில் நடக்கும் பரபர போராட்டம்தான் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை. நால்வருமே அவரவர் கதாபாத்திரங்களில் இயல்பாய் நடித்திருக்கிறார்கள். கிளைமாக்சில் எதிர்பாராத டுவிஸ்ட் வைத்துள்ளார் இயக்குனர். ராம்ஜியின் பணத்திற்காகவும், அவர் கண்டுபிடித்த மருந்திற்காகவும் போட்டி போட்டவர்கள் அப்படி ஒரு வலையில் மாட்டிக் கொள்வார்கள் என்பது நாம் எதிர்பார்க்காத ஒன்று. 

ஒரே வீட்டிற்குள் கதை நகர்ந்தாலும் தொய்வில்லாத திரைக்கதை அமைத்து படத்தை விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.