ஒரு த்ரில்லர் படத்தை விறுவிறுப்பாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் யுவராஜ்.

விவேக் ராஜகோபால் ஒரு வங்கியில் அதிகாரியாக இருக்கிறார். நேர்மையாக இருக்கும் அவர் தங்களது சட்ட விரோத பணப் பரிவர்த்தனைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என ஒரு கும்பல் கடத்துகிறது. அது மட்டுமல்லாமல் அவரது இரண்டு கை விரல்களை துண்டித்து அவரது குடும்பத்தினருக்கு அனுப்பி மிரட்டுகிறது அந்த கும்பல். இதனிடையே, விவேக்கைத் தேடிக் கண்டுபிடிக்க அவரது அப்பாவும், முன்னாள் ரவுடியுமான பாலா முயல்கிறார். இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அப்பாவி வங்கி அதிகாரியாக விவேக் ராஜகோபால். தனது மனைவி, குழந்தையுடன் அந்த மலைப் பகுதி வங்கிக்கு புதிதாகப் பொறுப்பேற்கிறார். அடுத்த சில நாட்களிலேயே கடத்தப்படுகிறார். அதன்பின் வில்லனிடம் சிக்கித் தவிக்கிறார்.

சிறு வயதிலேயே தனது மகன் விவேக்கை அனாதை ஆசிரமத்தில் விட்டுவிட்டு வருபவர் முன்னாள் ரவுடியான பாலா. தனது மகனின் கடத்தல் பற்றித் தெரிய வந்து அவரை மீட்கப் பல முயற்சிகளைச் செய்கிறார். 

பிளாஷ்பேக்கில் சில காட்சிகளில் ஐஸ்வர்யா தத்தா நடித்திருக்கிறார். விவேக்கின் மனைவியாக லாவண்யா நடித்திருக்கிறார். சாத்தானின் ஆதிக்கத்தை உலகிற்குச் சொல்லும் வில்லனாக ராஜ் காலேஷ் நடித்திருக்கிறார். 

ரவுடியிசம், சாத்தான், கடத்தல் என புது ரூட்டில் படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் யுவராஜ். தெரிந்த முகங்கள் படத்தில் அதிகம் இல்லாதது குறையாக உள்ளது.