மலையாளத்தில் முக்கிய திரைக் கலைஞர்களில் ஒருவர் வினீத் சீனிவாசன். இயக்கம், நடிப்பு, டப்பிங் கலைஞர், பாடகர் என பல திறமைகளைக் கொண்டவர். அவரது நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்துள்ள படம் ‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’.

அபினவ் சுந்தர் நாயக் இயக்கத்தில், வினீத் சீனிவாசன், சுராஜ் வெஞ்சாரமூடு, சுதி கோப்பா, ஆர்ஷா சாந்தினி பைஜு, தன்வி ராம் மற்றும் பலர் நடித்துள்ள படம் இது.

இந்த மாதிரியான கதைகளை தமிழில் எடுக்க முடியுமா என்பது சந்தேகம்தான். அப்படி ஒரு சர்ச்சையான கதை இது. விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களிடம் இன்ஷுரன்ஸ் தொகையைப் பெற்றுத் தந்து அதில் ஒரு பெரிய தொகையை கமிஷனாக எடுத்துக் கொள்ளும் வக்கீல் முகுந்தன் உன்னியின் கதைதான் இந்தப் படம். தனது அம்மாவுக்கு ஒரு விபத்து நேரிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதுதான் இப்படியெல்லாம் கூட பணம் சம்பாதிக்க முடியும் என முகுந்தன் உன்னிக்குத் தெரிய வருகிறது. அம்மாவுக்கு இன்ஷுரன்ஸ் வாங்கித் தந்த அந்த வக்கீலை தடயமில்லாமல் கொன்றுவிட்டு அவர் செய்த வேலையை இவர் செய்ய ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் அதற்கு சிக்கல் வர அதை முகுந்தன் உன்னி சமாளித்தாரா இல்லையா என்பதுதான் மீதிக் கதை.

தான் ஒரு பெரிய வக்கீலாக வேண்டும், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்ற எண்ணம் கொண்டவர். அப்பாவியான தோற்றத்தில் இருந்தாலும் செய்யும் செயல்களில் அசகாய சூரராக இருக்கும் முகுந்தன் உன்னி கதாபாத்திரத்தில் வினீத் சீனிவாசன் பொருத்தமாக நடித்திருக்கிறார். சில காட்சிகளில் முகத்தில் எந்த சலனமும் காட்டாமல், அவர் செய்யும் வில்லத்தனமாக செயல்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன. ஆரம்பம் முதல் இறுதி வரை வினீத்தின் சாம்ராஜ்ஜியம்தான் படம் முழுவதும்.

வினீத்தால் கொல்லப்பட்டு அடிக்கடி அவர் முன் வந்து ஏளனம் பேசும் வக்கீலாக சுராஜ் வெஞ்வெஞ்சாரமூடு, வினீத்தின் உதவி வக்கீலாக சுதி கோப்பா ஆகியோருக்கும் படத்தில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

கதாநாயகிகளாக ஆர்ஷா சாந்தினி பைஜு, தன்வி வராம். வினீத்தின் முன்னாள் காதலியாக தன்வி, தற்போதைய காதலியாக ஆர்ஷா. இருவரில் ஆர்ஷா காதல் பார்வையில் மிரள வைக்கிறார்.

படம் முழுவதும் ஏறக்குறைய ஒரே ஒரு மருத்துவமனையைச் சுற்றியே நகர்ந்தாலும் காட்சிகள் விறுவிறுப்பாக நகரும் அளவிற்கு திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். இடைவேளைக்குப் பிறகு அங்கே, இங்கே என கொங்சம் தடுமாற்றத்துடன் சுற்றி வந்து பிறகு முடிக்கிறார்கள்.