சக்திவேல் இயக்கத்தில், பரத், வாணி போஜன், கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

த்ரில்லர் படங்களில் இது ஒரு மாறுபட்ட திரைக்கதையைக் கொண்ட படம் என தாராளமாகச் சொல்லலாம். படத்தின் ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை இதுதான் படத்தின் திரைக்கதை என பல மிரள வைக்கும் காட்சிகளை வைத்து, கடைசியில் அதற்கெல்லாம் ஒரு திருப்புமுனையைக் கொடுத்து அவையெல்லாம் வெறும் கதைதான் எனச் சொல்லி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்கள். திரைக்கதை சொல்வதில் புதிய உத்தி இது. அதைச் சிறப்பாகவே செய்திருக்கிறார் இயக்குனர் சக்திவேல்.

சிவில் என்ஜினியராக இருப்பவர் பரத். அவரது காதல் மனைவி வாணி போஜன், ஒரு மகன் என வசதியாக இருக்கிறார். ஆனால், வாணி போஜன் திடீரென அடிக்கடி எதையோ பார்த்து பயப்படுகிறார். குலதெய்வ கோயிலுக்குப் போய் பூஜை செய்தார் சரியாகிவிடும் என மாமியார் சொல்ல குடும்பத்துடன் வாணி ஊருக்குக் கிளம்புகிறார் பரத். அங்கு சென்று பூஜைகளை முடித்துவிட்டு இரவு நேரத்தில் திரும்பும் சமயம் வழியில் அவரது காரை வழி மறித்து சிலர் திடீரென தாக்குகிறார்கள். அவர்கள் மனிதர்களா அல்லது பேயா என குழம்பித் தவிக்கிறார் பரத். தனது குடும்பத்தைக் காப்பாற்ற அவர் போராடுகிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.

அன்பான கணவன், பாசமான அப்பா, மரியாதையான மருமகன் என அக்கதாபாத்திரத்தில் இயல்பாய் பொருந்தி நடித்திருக்கிறார் பரத். இரவு நேரத்தில் தங்களைச் சுற்றி நடக்கும் மர்மமான விஷயங்களிலிருந்து மனைவி, மகனைக் காப்பாற்றத் துடிக்கிறார். குடும்பப் பாங்கான கதாநாயகி வேடத்திற்கு பொருத்தமான நடிகையாக வாணி போஜன். அவர் ஏன் அடிக்கடி மிரள்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் ஹைலைட். அந்த சஸ்பென்ஸை திரைக்கதையில் கடைசி வரை காப்பாற்றியிருக்கிறார் இயக்குனர்.

கேஎஸ் ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார் கொஞ்ச நேரமே வந்தாலும் முக்கியக் கதாபாத்திரங்களாக இருக்கிறார்கள். 

திரைக்கதையில் என்னவெல்லாம் சொல்லி பயமுறுத்தலாம் என யோசித்து யோசித்து திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குனர். ஆனால், எதற்காக அவ்வளவையும் சொன்னார் என்பது தெரிய வரும் போது அந்த திரைக்கதையின் யுத்தி ரசிக்க வைக்கிறது.

இன்னும் சில நெகிழ்வான காட்சிகள் படத்தில் இருந்திருந்தால் அந்த சென்டிமென்ட் கிளைமாக்சுக்கு உதவியாக இருந்திருக்கும்.