தமிழை விட தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா அங்கு ஏற்கெனவே ‘பேபி’ என்ற படத்தில் முதன்மைக் கதாநாயகியாக நடித்து வெற்றி பெற்றிருந்தார். அடுத்து இந்த ‘யசோதா’ படத்தில் நடித்து மீண்டும் ஒரு வரவேற்பையும், வெற்றியையும் பெற்றிருக்கிறார்.

ஹரி - ஹரிஷ் இயக்கத்தில் சமந்தா, வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், சம்பத் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகி உள்ளது. ஆனால், டப்பிங் படம் போல இல்லாமல் நேரடிப் படத்தைப் பார்க்கும் உணர்வைத் தருகிறது.

ஏழைப் பெண்ணான சமந்தா தனது தங்கையின் ஆபரேஷனுக்காக வாடகைத் தாய் ஆக சம்மதிக்கிறார். வாடகைத் தாய்மார்களை கவனித்துக் கொள்வதற்காக அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு மையத்தை நடத்தி வரும் வரலட்சுமி சரத்குமாரின் ‘ஈவா’ என்ற மையத்திற்கு அழைத்து வரப்படுகிறார் சமந்தா. பலத்த கட்டுப்பாடுகள், பாதுகாப்புகள் கொண்ட அந்த மையத்தில் சமந்தா போன்றே பல அப்பாவிப் பெண்கள் இருக்கிறார்கள். போகப் போக அந்த மையத்தில் ஏதோ தவறு இருப்பதாக உணர்கிறார் சமந்தா. அதை விசாரிக்க இறங்குபவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்ன, அந்த மையத்தை வைத்துக் கொண்டு வரலட்சுமி என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

வாடகைத் தாய்மார்களைப் பற்றிய ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இந்தப் படம் இருக்கும் என டிரைலரைப் பார்த்ததும் ரசிகர்களுக்குத் தோன்றியது. ஆனால், வாடகைத் தாய் பற்றி மட்டுமல்லாமல் அதை வைத்து பெண்களின் அழகு பராமரிப்புக்கு மருந்து, பிரபலங்களின் கொலை என இன்னும் சில கிளைக் கதைகளை சேர்த்திருக்கிறார்கள். அனைத்தையும் திரைக்கதையில் சரியாக இணைத்து கடைசியில் ஆக்ஷன் படமாகவும் முடித்திருக்கிறார்கள் இயக்குனர்கள்.

யசோதா கதாபாத்திரத்தில் அப்பாவி ஏழைப் பெண்ணாகவும், அதன்பின் அதிரடியான ஆக்ஷன் ஹீரோயினாகவும் பொருத்தமாக நடித்திருக்கிறார் சமந்தா. தனி கதாநாயகியாகவும் தன்னால் ஒரு படத்தைத் தாங்க முடியும் என மீண்டும் நிரூபித்திருக்கிறார். சமந்தாவுக்கு இந்தப் படம் ஒரு திருப்புமுனையான படமாக அமையும். 

’ஈவா’ என்ற மையத்தை நடத்தி அதன் மூலம் அப்பாவிப் பெண்களைப் பயன்படுத்தி அவர்களைத் வாடகைத் தாய்களாக மாற்றி, அவர்கள் சுமக்கும் கருவிலிருந்து மருந்து எடுத்து அதை பெண்களின் அழகை பராமரிக்க பயன்படுத்தி, அதை வைத்து உலக அளவில் பிசினஸ் செய்யும் பெண்ணாக வரலட்சுமி. ஒரு கார்ப்பரேட் பிசினஸ் உமன் எப்படி இருப்பாரோ அதை ஸ்டைலிஷாகவும், வில்லித்தனமாகவும் செய்திருக்கிறார் வரலட்சுமி.

உன்னி முகுந்தனை முதலில் அப்பாவி டாக்டர் என நினைத்தால் அவரும் வரலட்சுமியின் பார்ட்னர், முன்னாள் காதலன் என தெரிய வரும் போது அதிர்ச்சி. சாப்ட் வில்லனாக கலக்கியிருக்கிறார் உன்னி. 

சம்பத், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, ஷத்ரு என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் சரியான தேர்வு.

பல தமிழ்ப் படங்களுக்கு சிறப்பான ஒளிப்பதிவு செய்துள்ள சுகுமார், இந்த தெலுங்கு படத்திற்கும் சிறப்பான ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளார். குறிப்பாக அந்த ‘ஈவா’ மையத்தை கதைக்கேற்றபடி தனது கேமரா கோணங்களில் பிரம்மாண்டமாகக் காட்டியுள்ளார். மணிசர்மா பின்னணி இசையும் படத்தில் குறிப்பிட வேண்டிய ஒன்று. படத்தில் பாடல்களுக்கு முக்கியத்துவம் தராமல் விட்டிருக்கிறார்கள்.

சில லாஜிக் மீறல்கள் படத்தில் இருந்தாலும் அதைப் பற்றி யோசிக்க வைக்காமல் படத்தை பரபரப்பாக நகர்த்தியிருப்பதால் ரசிக்க வைக்கிறது.