ஒரு அரசியல் கதையை, சாதாரணமாக ஆரம்பித்து, மெல்ல மெல்ல அரசியலை நோக்கி நகர்ந்து, கடைசி கட்டத்தில் ஒரு அரசியல் புயலையே உருவாக்கியுள்ளது இந்த ‘படவேட்டு’ படம்.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள மாலூர் என்ற சிறிய ஊரில் நடக்கும் ஒரு கதை. டீன் ஏஜ் வயதில் பைக் விபத்தில் காலில் அடிபட்டதால் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே சோம்பேறித்தனமாய் இருக்கிறார் நிவின் பாலி. அப்படிப்பட்டவர் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. ஊரே அவருடைய பேச்சைக் கேட்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறார். அதற்குக் காரணம் ஒரு அரசியல் கட்சி. அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இந்தக் காலத்தில் இப்படி ஒரு சோம்பேறியா என ஆச்சரியப்படும் அளவிற்கு நடித்திருக்கிறார். சாப்பிடுவதும், தூங்குவதும், ஊரைச் சுற்றுவதுமாய் இருக்கிறார் நிவின் பாலி. அத்தை வளர்க்கும் மாடுகள் தரும் பால், கோழிகள் இடும் முட்டை இவைதான் அவருக்கும், அத்தைக்குமான வருமானம். ஒரு காலத்தில் விளையாட்டு வீரராக இருந்து பல பதக்கங்களை வென்றவர் விபத்தில் சிக்கியதால் வாழ்க்கையே மாறிப் போகிறது. அப்படிப்பட்டவர் தனது சோம்பேறித்தனத்தைத் தூக்கி எறிந்து விவசாயம் செய்து ஊர் மக்களுக்கே முன் மாதிரியாய் உயர்ந்து நிற்கிறார். ஊருக்கும், தனக்கும் கெடுதல் நினைக்கும் அரசியல் கட்சியை தனி ஒரு ஆளாய் எதிர்த்து நிற்பதில் ஹீரோவாய் தெரிகிறார்.

‘அருவி’ தமிழ்ப் படத்தில் நடித்த அதிதி பாலன் தான் படத்தின் கதாநாயகி. ஊரில் உள்ள சொசைட்டில் வேலை பார்ப்பவர், விவாகரத்து பெற்றவர். நிவின் பாலி மீது காதல் கொண்டு ஒரு கட்சி கூட்டத்தில் அவர் பார்க்கும் காதல் பார்வையால் தியேட்டரில் மிரண்டு போனவர்கள்தான் அதிகம்.

படத்தின் வில்லனாக, மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல் கட்சியின் ஊர் பிரமுகராக ஷம்மி திலகன் மிரட்டியிருக்கிறார். நிவின் பாலியின் அத்தையாக ரம்யா சுரேஷ் யதார்த்தமாய் நடித்திருக்கிறார்.

கேரளாவில் அரசியல் கட்சிகளின் மோதல், அவர்களது ஈடுபாடு எல்லாமே மற்ற மாநிலங்களை விட கொஞ்சம் கூடுதலாக இருக்கும். இந்தப் படத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், மக்களை ஏமாற்றிப் பிழைக்க நினைக்கும் ஒரு கட்சிக்குமான மோதலாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர் லிஜு கிருஷ்ணன். 

காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் மிக அழுத்தமாக நகர்கின்றன. இடைவேளை வரை நிவின் பாலி சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே அதிகம் இருக்கின்றன. இடைவேளைக்குப் பின் படம் அரசியல் படமாக மாறி பரபரப்பாக நகர்கிறது.

பல அழுத்தமான காட்சிகளில் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும், மாலூரின் இயல்பான அழகைக் காட்டுவதில் தீபக் மேனனின் ஒளிப்பதிவும் படவேட்டுக்கு பக்கபலமாக அமைந்துள்ளது.

நம் மண்ணையும், நம்மையும் நாம்தான் காப்பாற்ற வேண்டும். வேறு ஒருவரையும் அத்து மீறி நுழைய விடக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் இந்த ‘படவேட்டு’, பார்க்க வேண்டிய ஒரு படம்.