சினிமாவைப் பார்த்து பார்த்து இப்படித்தான் காதலிக்க வேண்டும் என சினிமாவில் வருவதைப் போன்றே சில காட்சிகளை எழுதி வைத்து ஒரு பெண்ணைக் காதலிக்க வேண்டும் என்று நினைக்கும் நாயகன். அவரது இயல்பான குணத்தைக் கண்டு முதல் பார்வையிலேயே அவரைத் திருமணம் செய்து கொள்ளும் நாயகி. இவர்களுக்கு இடையில் திருமணத்திற்குப் பிறகு வரும் காதல் தான் படத்தின் கதை.

அறிமுக இயக்குனர் ராகவ் மிர்தத் ஒரு சுவாரசியமான காதல் கதையைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார். அதே சமயம் கணவனுக்கும், மனைவிக்குமான விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அழகாய் உணர்த்தி இருக்கிறார்.

அரியர்ஸ் வைத்திருந்தாலும், அப்பாவின் நண்பர் அலுவலகத்திலேயே வேலை பார்க்கும் நாயகன் கௌசிக் ராம். சினிமாவில் வரும் காதல் காட்சிகளைப் பட்டியலிட்டு அது போல காதலிக்க வேண்டும் என நினைக்கிறார். அதே சமயம் அப்பாவின் மற்றொரு நண்பரின் மகளான அஞ்சலி நாயர், கௌசிக்கைப் பார்த்ததுமே பிடித்துப் போய் அப்போதே திருமணம் செய்து கொள்ளலாமா எனக் கேட்கிறார். பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் நடக்கிறது. மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருக்கும் கௌசிக், அஞ்சலி வாழ்க்கையில் சிறு மோதல் ஆரம்பமாகி, பெரிதாகிறது. இருவரும் பிரிகிறார்கள், பிரிந்தவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

90ஸ் கிட்ஸ் என தன்னைப் பற்றி பெருமைப்பட்டுக் கொள்ளும் கதாநாயகன் கௌசிக் ராம். சினிமாவை அதிகம் நேசிக்கும் ஒருவர். சினிமாவில் வரும் காதல் போலவே தனது காதலும் இருக்க வேண்டும் என நினைக்கிறார். இருந்தாலும், அஞ்சலியே வந்து பிடித்திருக்கிறது என்று சொல்லும் போது அவரும் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். திருமணத்திற்குப் பிறகு விழுந்து விழுந்து காதலிக்கிறார். கலகலப்பாகவும், காதலாகவும், காமெடியாகவும் நடித்து, தமிழ் சினிமாவில் வலம் வரக் கூடிய எல்லா தகுதியும் கௌசிக்கிற்கு இருக்கிறது.

அஞ்சலி நாயர், ஒரு மெச்சூர்டான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகன் கௌசிக்கிற்கு எதிரான ஒரு குணாதிசயம். இருந்தாலும் கணவன் ‘கௌசிக்’ தத்தி ஆக இருப்பதுதான் அவருக்குப் பிடிக்கிறது. கௌசிக்கைத் திருமணம் செய்து கொள்ள தான் எடுத்த முடிவு எந்த விதத்திலும் தோல்வியாகப் போய் விடக் கூடாது என தனது திருமண பந்தத்தை காப்பாற்றத் துடிக்கும் கதாபாத்திரம். கதாபாத்திரத்தை சரியாக உள்வாங்கி சிறப்பாக நடித்திருக்கிறார்.

இரண்டாம் கதாநாயகி ஹெரோஷினிக்கு அதிக வேலையில்லை. கௌசிக்கின் நட்பு வட்டாரத்தில் விக்னேஷ் காந்த், அனிதா சம்பத், கௌசிக்கின் பெற்றோர் மாத்யூ வர்கீஸ், ஜெயா சாமிநாதன் அவரவர் கதாபாத்திரத்தில் அளவாய், இயல்பாய் நடித்திருக்கிறார்கள்.

ஹரி எஸ்ஆர் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். முக்கியமான காட்சிகளில் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாய் அமைந்துள்ளது. கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவும் லைட்டிங்குகளில் மிளிர்கிறது.

இடைவேளைக்குப் பின் லேசான திரைக்கதை தடுமாற்றம், சினிமாத்தனமான கிளைமாக்ஸ் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இருந்தாலும் ஒரு ஜாலியான, தேவையான காதல் கதையைப் பார்த்த திருப்தி ஏற்படுகிறது.