சர்தார் - விமர்சனம்

22 Oct 2022

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, சங்கி பாண்டே மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

இயக்குனராக அறிமுகமான ‘இரும்புத் திரை’ படம் மூலம் வியக்க வைத்தவர் இயக்குனர் பிஎஸ் மித்ரன். அடுத்து அவர் இயக்கிய ‘ஹீரோ’ படமும் நல்ல கதையம்சம் உள்ள படம்தான். அவரது இயக்கத்தில் மூன்றாவது படமாக வந்துள்ள இந்த ‘சர்தார்’ படம் மூலம் முதல் படம் போலவே முத்திரை பதித்துள்ளார்.

அப்பா சர்தார், மகன் விஜய பிரகாஷ் என இரண்டு வேடங்களில் கார்த்தி. சர்தார் இந்திய உளவாளி. விஜய பிரகாஷ் தமிழ்நாடு போலீஸ் இன்ஸ்பெக்டர். சர்தார் பற்றிய முக்கிய பைல் ஒன்று கடும் பாதுகாப்பில் இருந்து திருடப்படுகிறது. அதைப் பற்றி விசாரணையில் இறங்குகிறார் இன்ஸ்பெக்டர் விஜயபிரகாஷ். தேசத் துரோகி என குற்றம் சாட்டப்பட்டு பங்களாதேஷ் சிறையில் இருக்கும் அப்பா சர்தாரைப் பற்றி சில உண்மைகளைத் தெரிந்து கொள்கிறார் மகன் விஜய்பிரகாஷ். அதே சமயம் ஒரு பெரும் தண்ணீர் வியாபாரத்தை நாடு முழுக்க ஆரம்பிக்கிறது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதைத் தடுக்க சர்தார் களம் இறங்குகிறார். அப்பாவைக் குற்றமற்றவர் என நிரூபிக்க நினைக்கிறார் மகன். பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய ஒரு படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மித்ரன். ஒரு காட்சியைக் கொஞ்சம் கவனிக்காமல் விட்டாலும் அடுத்து நடப்பவற்றை புரிந்து கொள்ள முடியாது. நல்ல தியேட்டர்களைத் தேர்வு செய்து படத்தைப் பாருங்கள். அப்போதுதான் வசனங்களை உன்னிப்பாகக் கவனிக்க முடியும். பரபரவென நகரும் விதத்தில் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

அப்பா சர்தார், மகன் விஜய பிரகாஷ் என இரண்டு வேடங்களில் கார்த்தி. மகனை விட அப்பா அதிகம் ரசிக்க வைக்கிறார். அந்த அளவிற்கு அசத்தலான ஆக்ஷன் காட்சிகள், ஹீரோயிசனம் என அப்பாவுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். அப்பா மீது வெறுப்புள்ள மகன், ஒரு கட்டத்தில் அப்பா பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொண்டு நேசிக்க ஆரம்பிக்கிறார். கிளைமாக்சில் இரண்டு கதாபாத்திரங்களும் ஆக்ஷனில் அசத்தும் விதத்தில் வைத்திருக்கிறார் இயக்குனர். கார்த்திக்கு மற்றுமொரு பேர் சொல்லும் படம். 

மகன் கார்த்தியின் காதலியாக ராஷி கண்ணா, அப்பா கார்த்தியின் காதலி, பின் மனைவியாக ரஜிஷா விஜயன். வெறும் வந்து போகும் கதாநாயகிகளாக இல்லாமல் கதைக்கு உதவும் கதாநாயகிகளாக இருக்கிறார்கள். லைலா கொஞ்சமே வந்தாலும் மனதில் இடம் பிடிக்கிறார். 

சங்கி பாண்டே தான் கார்ப்பரேட் வில்லன். மத்திய அரசு உயரதிகாரியாக இருந்து தண்ணீர் வியாபாரத்தில் கிடைக்கப் போகும் பல லட்சம் கோடியைப் பார்த்து ஆசைப்பட்டு பிசினஸ்மேன் ஆகி, நாட்டுக்குத் துரோகியாகவும் மாறுகிறார்.

ஜிவி பிரகாஷின் இசையில் பின்னணி இசை அதிகமாக ஒலிக்கிறது. சில முக்கிய வசனக் காட்சிகளில் அமைதி காத்திருக்கலாம். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவுக்கு நிறைய வேலை. 

படத்தின் நீளம் இரண்டே முக்கால் மணி நேரமாக இருப்பதை இரண்டரை மணி நேரமாக வைத்திருக்கலாம். வசனம், பின்னணி இசை ஆகியவற்றின் மிக்சிங்கை நேர்த்தியாகச் செய்திருக்கலாம். 

தண்ணீர் என்பது ஒரு நாட்டுக்கு எவ்வளவு தேவை. அந்தத் தண்ணீரை பாட்டிலில் அடைத்து வைத்து வியாபாரம் செய்வது ஒரு பக்கம் என்றால், அதனால் ஏற்படும் பாதிப்புகள் எவ்வளவு என்பதையும் பெரும் அக்கறையுடன் கொடுத்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் தண்ணீரால் இப்படியெல்லாம் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. படத்தைப் பார்ப்பவர்கள் தண்ணீரை வீணாக்காமலும், பாட்டில் தண்ணீரைக் குடிக்காமலும் இருப்பார்கள்.

Tags: sardar, ps mithran, gv prakashkumar, karthi, raashi khanna, laila, rajisha vijayan

Share via: