ப்ரின்ஸ் - விமர்சனம்
22 Oct 2022
அனுதீப் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், சிவகார்த்திகேயன் மரியா ரியாபோஷக்பா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள படம்.
மீண்டும் ஒரு காதல் கலந்த நகைச்சுவைப் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். தெலுங்கில் ‘ஜதிரத்னலு’ என்ற வெற்றிப் படத்தை இதற்கு முன் இயக்கிய அனுதீப் இப்படம் மூலம் தமிழுக்கு வந்துள்ளார்.
பள்ளியில் சமூக அறிவியில் ஆசிரியராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். அவருடைய பள்ளிக்கு ஆங்கில ஆசிரியராக வேலைக்குச் சேர்கிறார் பிரிட்டிஷ் பெண்ணான மரியா. பார்த்த உடனேயே காதல் கொள்கிறார் சிவா. காதலித்துத்துதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மகன் சிவாவிடம் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார் அப்பா சத்யராஜ். அதனால், அப்பா தன் காதலை ஏற்றுக் கொள்வார் என அவரிடம் சொல்கிறார் சிவா. சுதந்திரப் போராட்ட காலத்தில் தாத்தாவைச் சுட்டுக் கொன்ற, நம்மை 200 ஆண்டுகள் அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலிப்பதா என எதிர்ப்பு தெரிவிக்கிறார் சத்யராஜ். அப்பா எதிர்ப்பை மீறி காதலியை சிவா கைபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
தன்னுடைய படங்களில் நகைச்சுவை இருக்க வேண்டும், குடும்பத்துடன் அனைவரும் வந்து பார்க்க வேண்டும் என்ற விதத்தில்தான் படங்களைத் தேர்வு செய்வது சிவாவின் வழக்கம். அந்த விதத்தில் இந்தப் படம் அமைந்துள்ளது. படம் முழுவதுமே நகைச்சுவைத் தோரணங்கள் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், சில பல காட்சிகளில் மட்டும்தான் அதிகமான நகைச்சுவை இருக்கிறது.
சிவகார்த்திகேயனுக்கு இந்த மாதிரியான படங்களும், நகைச்சுவையும் எளிதாக நடித்து விடக் கூடியவை. இது போன்ற பல காமெடிகளை ‘அது இது எது’ நிகழ்ச்சியில் அவர் டிவி தொகுப்பாளராக இருந்த போதே பல முறை நேரடியாகவே பார்த்து ரசித்திருப்பார். பள்ளி மாணவர்களுடனான காட்சியில் காமெடியாகவும், மரியாவுடனான காட்சிகளில் காதலனாகவும், அப்பா சத்யராஜுடனான காட்சிகளில் பாசக்கார மகனாகவும் கவர்கிறார்.
எமி ஜாக்சனுக்குப் பிறகு முதல் படத்திலேயே பெயர் வாங்கும் மற்றொரு வெளிநாட்டு நடிகையாக மரியா. சின்னச் சின்ன முகபாவங்களில் கூட அனுபவ நடிகை போல நடித்திருக்கிறார். மொழி புரியாமலேயே இந்த அளவிற்கு நடிப்பது ஆச்சரியம்தான், பாராட்டுக்கள் மரியா.
அப்பா கதாபாத்திரத்தில் நகைச்சுவையும், குதர்க்கமும் நிறைந்தவராக சத்யராஜ். வில்லனாக இருந்த காலத்திலேயே இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் எல்லாம் அவருக்குக் கை வந்த கலை. சிவா, மரியா, சத்யராஜ் ஆகிய மூவரைச் சுற்றியேதான் படம் அதிகம் நகர்கிறது.
பிரேம்ஜியை எல்லாம் சீரியசான கதாபாத்திரங்களில் பார்க்க முடியவில்லை. ஆனாலும், இவரைப் போன்ற சிலர் நிஜ வாழ்க்கையில் இருக்கத்தான் செய்கிறார்கள். சிவாவின் நண்பர்களாக நடித்திருப்பவர்களுக்கு அதிக வேலையில்லை. ஊர் மக்களாக நடித்திருக்கும் சிலர் அடிக்கும் கமெண்ட்கள் கூட ரசிக்க வைக்கிறது. ஆனந்தராஜ், சூரி ஆகியோரும் ஒரே ஒரு காட்சியில் வந்து போகிறார்கள்.
தமன் இசையில் “ஜெஸ்ஸிகா....மற்றும் ‘பிம்பிலிக்கி’ பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன.
ஆங்காங்கே உள்ள நகைச்சவைத் தோரணங்களை படம் முழுவதும் தொடர்ச்சியாக வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அதற்கான சந்தர்ப்பங்கள் இருந்தும் தவறவிட்டிருக்கிறார் இயக்குனர்.
ஜாலியாக டைம் பாஸ் செய்ய நினைப்பவர்களுக்கு ‘ப்ரின்ஸ்’ பிடிக்கும்.
Tags: Prince, KV Anudeep, Thaman, Sivakarthikeyan, Maria Riaboshapka, Sathyaraj