தமிழ் சினிமாவில் கூட சிறு தெய்வங்களை மையப்படுத்தி இந்த அளவிற்கு ஒரு கிராமத்துக் கலாச்சாராப் படம் வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். கன்னடத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த ‘காந்தாரா’ படம் தற்போது தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி இங்குள்ள ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது.

கடலோர கர்நாடக மலை கிராமப் பகுதியில் துளு மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களின் வாழ்வியலை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர் ரிஷப் ஷெட்டி.

150 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதியை ஆண்ட ஒரு அரசர் மலை கிராம மக்கள் வழிபட்ட கடவுளின் சிலையைப் பெற்றுக் கொண்டு அதற்கு பதிலாக 100 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களை அந்த மக்களுக்கு தானமாக வழங்குகிறார். 1990களில் அந்த மலைவாழ் மக்களிடமிருந்து விவசாய நிலங்களை மீட்க, மன்னரின் தற்போதைய வாரிசு முயற்சிக்கிறார். மக்களுக்கு நல்லது செய்வதாக சொல்லிக் கொண்டே வில்லத்தனம் செய்கிறார். அதே சமயம் வனத்துறையும் அந்தப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க திட்டமிடுகிறது. அவற்றிலிருந்து தன் சக மக்களை ரிஷப் ஷெட்டி எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஆண்ட பரம்பரை, அதிகார வர்க்கம் அவற்றிற்கிடையில் தங்கள் தெய்வம், திருவிழா, கலாச்சாரம், காடு ஆகியவற்றைக் காப்பாற்ற அந்தப் பகுதி மக்கள் எப்படிப் போராடுகிறார்கள் என்பதை கிராமத்து தெய்வம், அந்தத் தெய்வத்தின் பெயரால் மக்களிடம் நம்பிக்கையை விதைக்கும் சாமியாடி என அம் மண்ணின் பெருமை, மக்களின் பழக்க வழக்கங்களை அச்சு அசலாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

கிராமத்து இளைஞனன் சிவா என்ற கதாபாத்திரத்தில் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். பன்றி வேட்டை, குடி, பீடி, காதலியிடம் குறும்பு என பொறுப்பில்லாமல் சுற்றித் திரிபவராகவே மாறியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகளில் அவர் எடுக்கும் எதிர்பாராத விஸ்வரூபம் நம்மை அதிர வைத்து படம் முடிந்த பின்னும் அப்படியே உட்கார வைக்கிறது.

ரிஷப் ஷெட்டியின் காதலியாக சப்தமி கௌடா. மலைவாழ் பெண்ணாக இருந்தாலும் படித்து முடித்து வனத் துறையில் வேலைக்குச் சேர்கிறார். சேர்ந்த உடனேயே தன் மக்களுக்கு எதிராக களம் இறங்க வேண்டிய சூழல் அவருக்கு. ஒரு பக்கம் காதலன், மறுபக்கம் ஊர் மக்கள், இன்னொரு பக்கம் கடமை என இருக்கும் லீலா கதாபாத்திரத்தில் சப்தமியின் நடிப்பு சிறப்பு.

வனத் துறை அதிகாரியாக கிஷோர், அரச பரம்பரையின் வாரிசாக அச்யுத் குமார். இருவரில் நாம் ஒருவரை நல்லவராகவும், இன்னொருவரை கெட்டவராகவும் நினைக்க, அதை எதிர்பாராத விதத்தில் மாற்றிவிடுகிறார் இயக்குனர்.

அஜனீஷ் லோக்நாத் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம். அதிலும் கோவில் திருவிழா சம்பந்தப்பட்ட காட்சிகளில் அவருடைய இசையும் சேர்ந்து தனி மிரட்டலைத் தருகிறது. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலை இயக்கம், ஆடை அலங்காரம், சண்டைப் பயிற்சி என அனைத்துமே இயக்குனருக்கு மிகச் சரியாகக் கை கொடுத்திருக்கிறது.

இடைவேளைக்குப் பின் சிறு தொய்வு, சில தேவையற்ற நகைச்சுவைக் காட்சிகளைத் தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

மண் மணம் மாறாமல் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கும் மக்களைப் பற்றிய கதையைப் பார்க்கும் வாய்ப்பு மொழி எல்லையை மீறி எப்போதாவது ஒரு முறைதான் இப்படி வரும். அப்படியான ஒரு படம்தான் இந்த ‘காந்தாரா’.