கல்யாண் இயக்கத்தில், திலீபன், யோகி பாபு, பேபி பிரியா கல்யாண் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘ஷு’.

சிறுமிகள் கடத்தல், டைம் டிராவல் என இரண்டு தளங்களில் திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் கல்யாண். அதில் சிறுமிகள் கடத்தல் பற்றி மிகவும் விவரமாகக் காட்டி பதைபதைக்க வைக்கிறார். அவ்வளவு விவரத்துடன் படத்தில் சிறுமிகள் கடத்தலைப் பற்றிக் காட்ட வேண்டுமா என்ற கேள்வி படம் பார்க்கும் போது வருகிறது.

திலீபன் டைம் டிராவல் செய்யக் கூடிய ஷு ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அதை வைத்து பத்து நிமிடங்களுக்குப் பிறகும், பத்து நாட்களுக்கு முன்பும் பயணிக்கலாம். ஒரு சந்தர்ப்பத்தில் போலீசிடம் சிக்காமல் இருக்க அந்த ஷுவை மறைத்து வைக்கிறார். ஒரு துப்பாக்கிச் சூட்டில் சிக்கி நினைவிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். செருப்பு தைக்கும் தொழிலாளி அந்தோணி தாசனின் மகளான சிறுமி பிரியாவிடம் அந்த ஷு கிடைக்கிறது. அதை அவர் யோகி பாபுவிடம் கொடுக்கிறார். அந்த ஷு அணிந்ததும் யோகிபாபுக்கு பல நல்ல விஷயங்கள் நடக்கிறது. இந்நிலையில் சிறுமி பிரியாவை அவரது அப்பா பணத்திற்காக பாலியல் தொழில் செய்யும் கும்பலிடம் விற்றுவிடுகிறார். சிறுமியை மீட்க திலீபன், யோகிபாபு தனித்தனியாக முயற்சிக்கிறார்கள். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பாலியல் தொழில் செய்யும் கும்பலிடம் பல சிறுமியர் சிக்கி கொடுமைப்படுத்தப்படுவதையும், அவர்களை வயதான மனிதர்கள் தங்கள் ஆசைக்கு பயன்படுத்துவதையும், அப்படியே வெளிப்படையாகக் காட்டுவதைத் தவிர்த்திருக்க வேண்டும். 

சிறுமி பிரியா கல்யாண், ஏழை சிறுமி கதாபாத்திரத்தில் இயல்பாய் நடித்திருக்கிறார். குடிகார அப்பா மீது கோபப்படாமல் அவர் செருப்பு தைத்து பணம் சம்பாதிக்கிறார். அவர் கடத்தப்பட்ட போது கூட அப்பா பற்றி புரிந்து கொள்ளாமல் பாசம் காட்டுகிறார். பல காட்சிகளில் பரிதாபப்பட வைக்கிறார் பிரியா.

யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பாலா கூட்டணி சிரிக்க வைக்கும் என்று எதிர்பார்த்தால் கொஞ்சம் சோதிக்கிறது. திலீபன் சில காட்சிகளில் வந்தாலும் கிளைமாக்சில் படத்தை சுபமாய் முடிக்க மீண்டெழுந்து வருகிறார்.

டைம் டிராவல், சிறுமிகள் கொடுமை என பரபரப்பாக நகர வேண்டிய படம் கிளைமாக்ஸில் மட்டும்தான் அந்த பரபரப்புடன் நகர்கிறது.