மணி சேகர் இயக்கத்தில், வினோத் லோகிதாஸ், ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, சத்யா, யாசீன், திவ்யா துரைசாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘சஞ்ஜீவன்’.

தென்னிந்திய மொழிகளில் வெளிவந்துள்ள முதல் ஸ்னூக்கர் திரைப்படம் இது. கிளப்புகளில் பணக்காரர்கள் மட்டும் விளையாடி வந்த இந்த விளையாட்டு இப்போது சாதாரண மக்களும் விளையாடும் அளவிற்கு பரவியுள்ளது. அப்படி ஒரு ஸ்னூக்கர் கிளப்பில் நடக்கும் சம்பவங்களை வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் மணி சேகர்.

வினோத் லோகிதாஸ் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர் நெருக்கமானவர்கள். ஸ்னூக்கர் நன்றாக விளையாடும் வினோத் ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் அதைக் கொண்டாட ஏற்காடு செல்கிறார்கள். அப்போது அவர்கள் செல்லும் கார் விபத்தில் சிக்கிக் கொள்கிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் இடைவேளை வரை பரபரப்பாக, ஜாலியாக படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். நண்பர்கள் அடிக்கும் லூட்டி, வினோத், திவ்யாவின் காதல் என படம் கலகலப்பாக நகர்கிறது. இடையில் ஸ்னூக்கர் விளையாட்டையும் அற்புதமான கேமரா கோணங்களில் ஒரு போட்டியை நேரடியாகப் பார்ப்பது போன்ற அனுபவத்துடன் தருகிறார்கள். படத்தில் நடித்துள்ள அனைவருமே மிகவும் யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள்.

இடைவேளைக்குப் பின் ஒரு கார் பயணம், அதன் விபத்து, வழியில் ஒரு சிக்கல் என சில நீண்ட காட்சிகளுடன் முதல் பாதிக்கு சம்பந்தம் இல்லாத விதத்தில் இரண்டாம் பாதி நகர்ந்து படம் முடிகிறது. முதல் பாதியை அவ்வளவு யோசித்த இயக்குனர், இரண்டாம் பாதியை வேறு மாதிரி சிந்தித்து படத்தின் போக்கையே மாற்றிவிட்டார்.

கார்த்திக் ஸ்வர்ணகுமார் ஒளிப்பதிவு, தனுஷ் மேனன் இசை படத்தில் குறிப்பிட வேண்டியவை. படத்தை வேறு ஒரு தளத்தில் அவை நகர்த்திச் செல்கின்றன.