கேஎல் கண்ணன் இயக்கத்தில், விதார்த், ஷிரிதா ராவ், சார்லி, வம்சி கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ஆற்றல்’.

‘மைனா’ படத்திற்குப் பிறகு வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருபவர் விதார்த். இந்தப் படமும் ஒரு வித்தியாசமான கதைதான். சென்டிமென்ட், ஆக்ஷன், காதல், த்ரில்லர் கலந்த ஒரு படமாக இந்தப் படம் வெளிவந்துள்ளது.

ஆள் இல்லாமல் ஓடும் காரை ஒன்றைக் கண்டுபிடிப்பதுதான் விதார்த்தின் லட்சியம். அதற்கான முயற்சியிலும் இருக்கிறார். இந்நிலையில் அவருடைய அப்பா சார்லி விபத்து ஒன்றில் இறந்துவிடுகிறார். அதன் பிறகு தனது அப்பா கொலை செய்யப்பட்டிருக்கலாம், அவரிடமிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுகிறார். அது பற்றிய உண்மைகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அதில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அமைதியான ஒரு கதாபாத்திரத்தில் அழுத்தமாய் நடித்திருக்கிறார் விதார்த். ஒரு பக்கம் காதல், மற்றொரு பக்கம் எமோஷன், இன்னொரு பக்கம் ஆக்ஷன் என அவருடைய கதாபாத்திரம் அமைந்துள்ளது. ஷிரியா ராவ் காதல் காட்சிகளில் வெட்கத்துடன் நடித்து கவர்கிறார். மகன்களின் ஆசையை நிறைவேற்றத் துடிக்கும் அன்பாவான அப்பாவாக சார்லி மனதில் இடம் பிடிக்கிறார்.

பணத்தைக் கொள்ளையடிப்பது, ஆட்களைக் கொலை செய்வது என்பது பழைய பார்முலாவில் இருந்தாலும் அதை இன்றைய உணவு டெலிவரி ஆட்களுடன் சம்பந்தப்படுத்தி காட்டியிருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. வில்லனாக வம்சி கிருஷ்ணா. நடிக்க பெரிய வாய்ப்பில்லை.

ஆளில்லாத கார் பற்றிய காட்சிகளை இன்னும் சுவாரசியப்படுத்தி இருக்கலாம். கிளைமாக்சில் மட்டும் அந்தக் காரைக் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அனைத்தும் கலந்த கமர்ஷியல் கதை, திரைக்கதையை மெதவாக நகர்த்தால், இன்னும் விறுவிறுப்புடன் கொடுத்திருக்கலாம்.