ரமேஷ் பாரதி இயக்கத்தில், சிரிஷ், மிருதுளா முரளி, அஞ்சலி நாயர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

‘மெட்ரோ’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சிரிஷ் கதாநாயகனாக நடித்துள்ள நான்காவது படம். கிராமத்துக் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என இந்தப் படத்தைத் தேர்வு செய்திருக்கிறார்.

பெற்றோர்களால் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படும் பெண்கள் முன்னரே அளிக்கும் வேண்டுகோளின்படி திருமணத்திற்கு முன்பாக அவர்களைத் தூக்கி வந்து அவர்களது காதலர்களுடன் சேர்த்து வைப்பதை ஒரு தொழிலாக செய்பவர் சிரிஷ். பலரது குடும்பத்தில் நடக்க இருந்த கல்யாணத்தைக் கெடுத்து காதலர்களுக்கு ஆதரவாக இருக்கும் சிரிஷுக்கு அதே கல்யாணம் பிரச்சினையாக வந்து நிற்கிறது. காதலித்த மிருதுளாவும் கைவிட்டு விட ஜோசியர் சொன்னபடி குறிப்பிட்ட நாளுக்குள் அவர் திருமணம் நடந்தாக வேண்டும். ஆனால், யாருமே அவருக்கு பெண் தர மறுக்கிறார்கள். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சிட்டி கதாபாத்திரங்களில் நடித்த சிரிஷுக்கு கிராமத்துக் கதாபாத்திரத்தில் நடிக்கவும் தெரிந்திருக்கிறது. காமெடி கலந்த கதாபாத்திரம் என்பதால் அது இயல்பாக வந்துவிடுகிறது. கிளைமாக்சில் பல குடும்பங்களுக்கு அவர் செய்த செயல்களை மறந்து மன்னிக்கும் அளவுக்கு கதாபாத்திரத்தை உயர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

மிருதுளா முரளி சிரிஷின் காதலியாக நடித்து அடிக்கடி கோபப்படுகிறார். பல வீட்டுக் கல்யாணங்களை சிரிஷ் நிறுத்துவதுதான் அதற்குக் காரணம். மிருதுளாவின் தோழியாக அருந்ததி நாயர். அவர் கிளைமாக்சில் கதாநாயகியாக மாறுகிறார் என்பது எதிர்பாராத திருப்பம். சிரிஷின் நண்பராக சதீஷ், இந்தப் படத்திலும் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். சிவகார்த்திகேயனுடன் மட்டும்தான் அவருக்கு காமெடி வருகிறது.  யோகி பாபு கூட படத்தில் இருக்கிறார், அவ்வளவுதான். 

கிராமத்துப் பின்னணியில் நகைச்சுவைப் படம் எடுத்தால் எப்படியும் பி அன்ட் சி சென்டர்களையாவது ரசிக்க வைத்துவிடலாம் என நினைத்து எடுத்திருக்கிறார்கள்.