கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படித்த ஒவ்வொருவருக்கும் அந்த நாவல் எப்போது திரைப்படமாக வரும் என்ற ஆவல் ஏற்பட்டிருக்கும். அந்த ஆவலை இப்போது மிகச் சரியாகப் பூர்த்தி செய்திருக்கிறார் மணிரத்னம்.

தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு எத்தனையோ சரித்திரப் படங்கள் வந்திருக்கலாம். ஆனால், அவை எல்லாவற்றையும் விட இந்த சரித்திரப் படம் பல விதங்களில் மேலோங்கி நிற்கிறது. 

நாவலைத் திரைப்படமாக மாற்ற, நாவலில் உள்ளவற்றில் எதைச் சேர்க்க வேண்டும், எதை விடுக்க வேண்டும் என்று அதற்காக ஆய்வு செய்து தேர்வு செய்த எழுத்துப் பணியை மேற்கொண்ட அனைவரையும் பாராட்டியே ஆக வேண்டும். 

5 பாகங்கள், 2500 பக்கங்கள் கொண்ட ஒரு அற்புத நாவலை முதல் பாகத்தில் இப்படி மூன்று மணி நேரத்திற்குள் சுருக்கி, அதையும் சுவாரசியமாகத் தருவதென்பது பெரும் விஷயம். அதை மணிரத்னம் மற்றும் அவர் சார்ந்த குழுவினர் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். அதற்காக ஒட்டு மொத்த குழுவினருக்கும் நமது பாராட்டுக்கள்.

1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழ சாம்ராஜ்ஜியத்தில் ஏற்பட்ட ஒரு அரசியல் சூழ்ச்சி தான் படத்தின் கதை. சோழ தேசத்தை ஆண்டு வந்த சுந்தர சோழர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்படுகிறார். அவருக்குப் பிறகு அவருடைய மூத்த மகன் ஆதித்த கரிகாலன் அரியணை ஏறக் கூடாது என சோழருடன் இருப்பவர்களும், சிற்றரசர்களும் சதி செய்கிறார்கள். பாண்டிய மன்னனை ஆதித்த கரிகாலன் கொன்றதால் அவரைக் கொல்ல பாண்டிய மன்னனின் படையான ஆபத்துதவிகள் என்ற ஒரு குழு ஆதித்த கரிகாலனையும், அவரது தம்பி அருண்மொழி வர்மனையும் கொல்ல முயற்சிக்கிறது. தங்களது சாம்ராஜ்ஜியத்தை இந்த அரசியல் சூழ்ச்சியிலிருந்து காப்பாற்ற கரிகாலனின் சகோதரி குந்தவை முயற்சிக்கிறார். தனது முன்னாள் கணவரான பாண்டிய மன்னனைக் கொன்றதற்காக சோழ சாம்ராஜ்ஜியத்தை அழிக்க நந்தினி பெரும் திட்டத்துடன் இருக்கிறார். அதனால், வயதான சோழ நாட்டின் நிதியமைச்சரைத் திருமணம் செய்து கொண்டு அரண்மனையில் இருந்து கொண்டே செயலில் இறங்குகிறார். இவ்வளவு சூழ்ச்சிகளுக்கு நடுவில் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த முதல் பாகத்தின் கதை.

வட இந்தியாவில் போர் முனையில் இருக்கும் ஆதித்த கரிகாலன் தனது நாட்டில் நடக்கும் சதித் திட்டத்தை அறிந்து வர தனது நண்பனும், வல்லத்து இளவரசருமான வந்தியத் தேவனை அனுப்புகிறார். வந்தியத் தேவனும் இக்கதையில் முக்கிய கதாபாத்திரமாய் இருக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் ரசிகர்களின் மனதை அப்படியே கொள்ளை அடித்துவிடுகிறார் கார்த்தி. ஒரு குறும்புத்தனமும், அழகான பெண்களை ரசிக்கும் குணமும், எதையும் சமாளிக்கும்  வீரமும் என கார்த்தியின் நடிப்பு வேறு விதம்.

இளம் வயதில் நந்தினியைக் காதலித்து ஏமாந்தவர்தான் இளவரசர் ஆதித்த கரிகாலன். தன்னை ஏமாற்றி பாண்டிய மன்னனை மணமுடித்து, பின்னர் தங்கள் நாட்டின் வயதான நிதியமைச்சர் பழுவேட்டரையரை மணந்து கொண்டதால் நந்தினி மீது கடும் கோபத்தில் இருக்கிறார். அதனால், தலைநகர் தஞ்சைக்கே வர மாட்டேன் என்கிறார். எப்போதும் போர் புரிந்து தங்கள் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தும் எண்ணமே அவரிடம் அதிகம். காட்சிகள் கொஞ்சம்தான் என்றாலும் ஒவ்வொரு காட்சியிலும் தனது நடிப்பால் மிரட்டுகிறார் விக்ரம்.

இடைவேளைக்குப் பின்தான் வருகிறார் அழகான இளவரசர் அருண்மொழி வர்மன். அக்கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி. வீரமும், அழகும் ஒருங்கே இணைந்த ஒரு கதாபாத்திரம். இலங்கைத் தீவில் தங்கள் சோழ நாட்டின் வீரத்தை நிலைநாட்டும் போரில் ஈடுபட்டுள்ளவர். அங்கு அவரை சந்திக்கும் வந்தியத்தேவனுடன் நண்பனாகிறார். இந்த பாகத்தில் இடைவேளைக்குப் பின்தான் என்றாலும் இரண்டாம் பாகத்தில் இவரைச் சுற்றியே கதை நகரும் என்பதால் அதில் அதிகம் எதிர்பார்க்கலாம்.

இரண்டு பேரழகிகள் படத்தில், ஒருவர் த்ரிஷா, மற்றொருவர் ஐஸ்வர்யா ராய். குந்தவை த்ரிஷா, தங்கள் சாம்ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற நினைக்கிறார். நந்தினி ஐஸ்வர்யா ராய், தனது முன்னாள் கணவர் பாண்டியனைக் கொன்ற இந்த சோழ சாம்ராஜ்ஜியத்தை அழிக்க நினைக்கிறார். ஒரே படத்தில் இப்படி இரண்டு அழகிகளைப் பார்ப்பதும், அதில் அவர்களது நடிப்பும், அழகும் ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் கவரும்.

மேலே குறிப்பிட்டவை சில முக்கிய கதாபாத்திரங்கள். இவர்கள் அல்லாமல் பெரிய பழுவேட்டரையராக, சோழ சாம்ராஜ்ஜியத்தின் நிதி அமைச்சராக, வயதானாலும், இளம் பெண்ணான நந்தினியை திருமணம் செய்து கொண்டவராக சரத்குமார். இவரது தம்பி சின்ன பழுவேட்டரையராக தஞ்சை கோட்டையின் காவல் தளபதியாக பார்த்திபன் இருவரும் கம்பீர நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இவர்களுக்கு அடுத்து மற்றொரு ஒற்றனாக, வைணவ சமயத்தைப் பற்றி மக்களிடம் பேசிப் பரப்பு ஆழ்வார்க்கடியானாக ஜெயராம் கலகலப்பூட்டுகிறார்.

இவர்கள் தவிர சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சோபிதா துலிபலா, ஐஸ்வர்ய லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ்ராஜ், ரகுமான், அஷ்வின், கிஷோர், லால் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.

ஏஆர் ரகுமான் பின்னணி இசையைக் கேட்பதற்கு ஹாலிவுட் படங்களில் கேட்பதைப் போல வேறு ஒரு சிறந்த தரத்தில் உள்ளது. பாடல்களிலும் தனது ஈடுபாட்டைக் காட்டியுள்ளார். அதிகமான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாத இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தனது ஒளிப்பதிவில் உலகத்தரத்தைப் பதிவு செய்துள்ளார்.

படத்திற்கான திரைக்கதையை எழுதிய மணிரத்னம், ஜெயமோகன், குமரவேல், வசனம் எழுதிய ஜெயமோகன், நடனம் அமைத்த பிருந்தா, கலை இயக்கம் செய்த தோட்டா தரணி, ஆடை வடிவமைப்பு செய்த ஏகா லக்கானி, சந்திரகாந்த் சோனாவானே, படத்தொகுப்பு செய்த ஸ்ரீகர் பிரசாத், சிகை அலங்காலம், அணிகலன் அலங்காரம் செய்த விக்ரம் கெய்க்வாட், கிஷன்தாஸ் அன்ட் கோ, ஒலிப்பதிவு செய்த ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி என இந்தப் படத்திற்காக உழைத்த ஒவ்வொருவரையும் பாராட்டியே ஆக வேண்டும்.

தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் பதிவாக, சாதனையாக, பெருமையாக இந்த ‘பொன்னியின் செல்வன்’ அமைந்துள்ளது. படம் பார்த்த அனைவருக்கும் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற பேரார்வத்தை ஏற்படுத்தியுள்ளது.