தென்றல் போல மென்மையான காதல் படங்களைப் பார்த்து ரசிப்பது எப்போதோ நடக்கும் ஒன்று. அப்படிப்பட்ட ஒரு படம்தான் இந்த ‘நித்தம் ஒரு வானம்’.

நமது வாழ்க்கையில் எப்போதும் நேர்மறையான எண்ணங்களை வைத்திருக்க வேண்டும் என்று தன்னம்பிக்கைப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரா கார்த்திக்.

படத்திற்காக ஒரு கதை, அந்த கதைக்குள் இரு வேறு கதை என இதுவரை தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. எந்தக் குழப்பமும் இல்லாமல் அந்த கதைக்குள் கதைகளை படத்திற்கான கதையுடன் இணைத்திருக்கிறார் இயக்குனர்.

தன்னைச் சுற்றி எதுவுமே சுத்தமாக இல்லாதது போன்ற பயத்தைக் கொண்ட ஒரு மன நோயால் பாதிக்கப்பட்டவர் அசோக் செல்வன். ஐ.டி. கம்பெனியில் வேலை பார்ப்பவருக்கு திருமணம் நிச்சயமாகிறது. ஆனால், திருமணத்தன்று மணப்பெண் அவரது காதலருடன் ஓடி விடுகிறார். இதனால் மனதில் பெரிதும் பாதிக்கப்படுகிறார் அசோக் செல்வன். அவருக்கு சிகிச்சை அளிக்கும் சைக்யாட்ரிஸ்ட் அபிராமி, தான் எபதிய இரண்டு சிறு கதைககளைப் படிக்கக் கொடுக்கிறார். அந்தக் கதைகள் நிஜமானவை எனத் தெரிந்ததும் அக்கதையில் உள்ளவர்களைத் தேடிப் புறப்படுகிறார். அதன்பின் அவர் வாழ்க்கையில் என்னவெல்லாம் கற்றுக் கொள்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தனது முந்தைய படங்களில் இருந்து இந்தப் படத்தில் வேறு ஒரு கட்டத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார் அசோக் செல்வன். மூன்று விதமான கதாபாத்திரங்களில் மாறுபட்டு நடித்து ஆச்சரியப்பட வைக்கிறார். 

கல்லூரி மாணவி கதாபாத்திரத்தில் ஷிவாத்மிகா, கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் அபர்ணா பாலமுரளி, மாடர்ன் பெண்ணாக ரித்து வர்மா அவரவரர் கதாபாத்திரத்தில் தங்களது நடிப்பால் பேச வைக்கிறார்கள்.

கோபி சுந்தர் இசையமைப்பு, விது அய்யன்னா ஒளிப்பதிவு படத்திற்கு மிகப் பெரும் ஆதரவாக உள்ளது.

படத்தின் கடைசி அரை மணி நேரக் காட்சிகள் நம்மை என்னவோ செய்யும். வாழ்க்கை என்பது இதுதான், எதையும் சமாளிக்கும் பக்குவத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அழகழகான காதல் காட்சிகளுடன் சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.