பனாரஸ் என அழைக்கப்படும் காசி நகரில் நடக்கும் ஒரு காதல் கதை. கன்னடத்தில் தயாராகி தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி உள்ள படம் இது.

கன்னடத்தின் பிரபல இயக்குனரான ஜெயதீர்த்தா, புண்ணிய நகரமான காசி நகரின் பின்னணியில், ஒரு காதல் கதையை, ‘டைம் லூப்’ என்ற சயின்ஸ் பிக்ஷன் படமாகவும் கொடுத்திருக்கிறார்.

நண்பர்களிடம் சவால்விட்டபடி நாயகி சோனல் மொன்டீரோவை ஒரு பொய் சொல்லி தன்னுடன் பழக வைக்கிறார் நாயகன் சைத் கான். அவர்கள் சேர்ந்து எடுக்கும் ஒரு செல்பி புயலைக் கிளப்புகிறது. அதனால், அவமானப்படும் சோனல், தனது சித்தி, சித்தப்பா இருக்கும் காசிக்குச் செல்கிறார். தான் செய்த தவறை உணர்ந்த சைத் கான், சோனலைத் தேடி காசி செல்கிறார். அங்கு அவரை சந்தித்து மன்னிப்பு கேட்டாலும் சோனல் ஏற்க மறுக்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அறிமுகப் படத்திலேயே பான் இந்தியா நடிகராக அறிமுகமாகி இருக்கிறார் சயித் கான். ஒரு காதல் நாயகனுக்குரிய அனைத்து அம்சங்களும் அவரிடம் இருக்கிறது. முதல் படம் போலத் தெரியாத நடிப்பு, நடனம், ஸ்டன்ட் என நம்பிக்கை தரும் நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார்.

படத்தின் நாயகி சோனல், குடும்பப் பாங்காக பக்கத்து வீட்டுப் பெண் போல இயல்பான அழகுடன் இருக்கிறார். இவர்களோடு சுஜய் சாஸ்திரி, அச்யுத் குமார், தேவராஜ் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்கள்.

முதல் பாதியை காதல் கதையாக நகர்த்திவிட்டு, இரண்டாம் பாதியை சயின்ஸ் பிக்ஷனாக நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். அது சிறப்பாக இருந்தாலும் அதுவே படத்திற்கான மைனஸாகவும் இருக்கிறது. இருந்தாலும் ஒரு காதல் கதையை அதற்கேயுரி பல எமோஷனல்களுடன் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குனர்.