சுந்தர் சி படங்கள் என்றாலே நிறைய நட்சத்திரங்கள், கலகலப்பான காமெடி என ரசிக்கும்படியாக இருக்கும். இந்தப் படத்தில் கூடுதலாகக் கொஞ்சம் கிளாமரையும் இணைத்திருக்கிறார்.

மூன்று சகோதரர்களுக்கும் அவர்களது மூன்று காதலிகளுக்கும் இடையிலான பிரச்சினைகள்தான் படத்தின் கதை. இந்தக் கதையில் கொஞ்சம் முறையற்ற காதலும் இணைந்து அதிர்ச்சியடைய வைக்கிறது.

ஊட்டியில் டிராவல்ஸ் கம்பெனி நடத்தும் பிரதாப் போத்தனுக்கு ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய் ஆகிய மகன்களும், ஒரே மகளாக திவ்யதர்ஷினியும் இருக்கிறார்கள். கல்யாணமான ஸ்ரீகாந்துக்கு ரைசா மீது கள்ளக் காதல், ஜீவாவுக்கு ஐஸ்வர்யா தத்தாவுடன் லிவிங் டு கெதர் ஆக வாழ்ந்து பிரிந்தாலும், தம்பி ஜெய்க்கு நிச்சயத்த மாள்விகா சர்மா மீது காதல், ஜெய்க்கோ சிறு வயது தோழி அம்ரிதா மீது காதல். இந்தக் காதல்கள் என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

காதல் சிக்கல்கள், மோதல்கள், பிரிவு, கடைசியில் யார் யாருடன் சேர்ந்தனர் என்பதை தனக்கே உரிய பாணியில் கலகலப்பாய் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி.

ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் நிஜமான அண்ணன் தம்பிகள் போல படத்தில் அடித்துக் கொள்கிறார்கள். இவர்களுக்குள் உள்ள சிக்கல்களை தீர்த்து வைக்க முயலும் சகோதரியாக திவ்யதர்ஷினி. 

மாள்விகா சர்மா, அம்ரிதா, ரைசா, ஐஸ்வர்யா தத்தா கிளாமரில் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்களில் சம்யுக்தா, பிரதாப் போத்தனுக்கு நடிக்கக் கூடுதல் வாய்ப்பு.

யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி சிரிக்க வைத்தாலும், இன்னும் சிரிக்க வைத்திருந்தால் படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கும்.

யுவனின் இசையில் ஒரு சில பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. 

காதல் கொஞ்சம், காமெடி கொஞ்சம் என இரண்டையும் சேர்த்து டைம் பாஸ் செய்ய வைத்திருக்கிறார்கள்.