லவ் டுடே - விமர்சனம்

06 Nov 2022

ஒவ்வொரு காலகட்டத்திலும் இளைஞர்களைக் கவர்வதற்கென்றே சில இயக்குனர்கள் சுவாரசியமான படங்களைக் கொடுத்து அவர்கள் மனதில் இடம் பிடித்துவிடுகிறார்கள். அப்படி ஒரு படமாக இந்தப் படத்தைக் கொடுத்து இன்றைய இளம் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துவிட்டார் பிரதீப் ரங்கநாதன்.

ஐ.டி-யில் வேலை பார்க்கும் நடுத்தரக் குடும்பத்து இளைஞன் பிரதீப் ரங்கநாதன். பிராமணப் பெண்ணான இவானாவைக் காதலிக்கிறார். இவர்கள் காதல் விவகாரம் தெரிந்ததும் இவானாவின் கண்டிப்பான அப்பாவான சத்யராஜ் ஒரு கண்டிஷன் போடுகிறார். பிரதீப்பும், இவானாவும் அவரவர் மொபைல் போன்களை ஒரு நாள் மாற்றி வைத்திருக்க வேண்டும் என்கிறார். இருவரும் அதன்படியே செய்கிறார்கள். இருவரது ‘தகிடுதத்தங்களும்’ மற்றவர்களுக்குத் தெரிய வருகிறது. அதன்பின் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

‘கோமாளி’ படத்தில் இயக்குனராக அறிமுகமாகி இரண்டாவது படமான இந்த ‘லவ் டுடே’ படத்தில் நாயகனாகவும் நம்பிக்கையுடன் அறிமுகமாகி இருக்கிறார் பிரதீப். ஒருவர் மீது மற்றவர் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதுதான் இந்தப் படத்தின் ஆழமான கருத்து. அதை காதல், கொஞ்சம் டபுள் மீனிங், நிறைய கலகலப்பு என இயக்குனராகக் கொடுத்து, தனக்காகவே ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி நடிப்பிலும் வெற்றி பெற்றிருக்கிறார் பிரதீப்.

ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவானாவுக்குள் இவ்வளவு நடிப்பு ஒளிந்திருக்கிறதா என இந்தப் படத்தைப் பார்த்தபின் ஆச்சரியமாக இருக்கிறது.

யோகி பாபு கதாபாத்திரம் நெகிழ்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. அக்கதாபாத்திரத்தில் பலரும் தங்களை பொருத்திப் பார்த்துக் கொள்வார்கள். அவரது ஜோடியாக ரவீணா. பிராக்டிக்கலாக யோசிக்கும் அக்காவாக நடித்திருக்கிறார்.

சத்யராஜ், ராதிகா சரத்குமார், இருவரும் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள். அவர்களது அனுபவம் படத்தில் சரியான காட்சியில் நிறைவாகப் பேச வைக்கிறது.

யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு அவ்வளவு உயிரூட்டியிருக்கிறது. காதல், சோகம், கிண்டல் என பல எமோஷனல்களில் யுவனின் இசை வேற லெவல்.

சில இரட்டை அர்த்த வசனங்கள், சில நெருக்கமான காட்சிகள் குடும்பத்து ரசிகர்களை வரவழைக்க வாய்ப்பில்லை. ‘நம்பிக்கை’ தரும் ஒரு படத்திற்கு அப்படியான ‘பூச்சு’ இல்லாமல் கொடுத்திருந்தால் அனைவரும் ரசிக்கும் படமாக இருந்திருக்கும்.

Tags: love today, Pradeep Ranganathan, Sathyaraj, Yogi Babu, Ivana, Radhika Sarathkumar, yuvan shankar raja

Share via: