துவாரக் ராஜா இயக்கத்தில், லிங்கா, ஆர்எஸ் கார்த்திக், கல்பிகா கணேஷ், மோனிஷா முரளி மற்றும் பலர் நடித்துள்ள படம்.

வளரும் இயக்குனர், வளரும் நடிகர்கள் இணைந்து இப்படி ஒரு மாறுபட்ட திரைக்கதை கொண்ட படத்தைக் கொடுத்திருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது. இம்மாதிரியான சிறிய திரைப்படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இந்தப் படத்திற்காக சிறப்பு குரல் பதிவு தந்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

வட சென்னையில் வசிக்கும் ஒரு சாதாரண குடும்பத்தைப் பற்றிய கதை. அம்மா ஜானகி, அவரது இரண்டு மகன்கள் லிங்கா, ஆர்எஸ் கார்த்திக். சிறு வயதிலேயே சீர்திருத்தப் பள்ளி தண்டனை, அங்கேயே சக மாணவர்களைக் கொல்லும் அளவிற்கு பாதிக்கப்பட்டவர் லிங்கா. இளைஞனான பின் கொலை செய்வதே அவருடைய வாழ்க்கையாகிப் போனது. தம்பி கார்த்திக்கோ பிளம்பிங் வேலை செய்து உழைத்து வாழ்கிறார். அண்ணன், தம்பி இருவருக்குமே சிறு வயது முதலே சண்டை. அவர்களின் அம்மா ஜானகி திடீரென இறந்துவிட, ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் அண்ணன் லிங்காவை பரோலில் எடுக்கும் முயற்சியில் இறங்குகிறார் தம்பி கார்த்திக். அதன் பின் நடப்பவை படத்தின் மீதிக் கதை.

சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த லிங்கா, இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருக்கிறார். பணத்திற்காக கொலை செய்யும் ஒரு கதாபாத்திரம். சிறு வயதிலேயே சீர்த்திருத்தப் பள்ளியில் பாலியல் ரீதியாக துன்புறுத்தலை அனுபவித்த கொடுமை அவரைப் பெரிதும் பாதித்து கொலைகாரனாக மாற்றிவிடுகிறது. அம்மா மறைந்த பின் அவருக்காக இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டும் என தவிக்கிறார். நடிக்க ஸ்கோப் உள்ள கதாபாத்திரம், அதை தன் நடிப்பால் நிறைவு செய்திருக்கிறார் லிங்கா.

தம்பியாக ஆர்எஸ் கார்த்திக். தன்னை விட சிறையில் இருக்கும் அண்ணன் லிங்கா மீதுதான் அம்மாவுக்கு அதிக பாசம் என பொறமைப்படுகிறார். அம்மா மறைந்தாலும் அவரது ஆசைப்படி அண்ணனை எப்படியாவது பரோலில் அழைத்து வர வேண்டும் என பெரும் முயற்சிகளை மேற்கொள்கிறார். வட சென்னை இளைஞனனை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.

அம்மாவாக நடித்துள்ள ஜானகி சுரேஷ், வக்கீலாக நடித்துள்ள வினோதினி வைத்யநாதன் ஆகியோருக்கு கதாநாயகிகளான கல்பிகா, மோனிஷா ஆகியோரை விட காட்சிகள் அதிகம்.

மகேஷ் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு, ராஜ்குமார் அமல் பின்னணி இசை படத்திற்கு பக்கபலம். 

இயல்பாகக் காட்ட வேண்டும் படத்தின் ஆரம்பக் காட்சிகள் கொடூரமாகவும், சில காட்டக் கூடாத காட்சிகளை காட்டியும் இருக்கிறார்கள். அவைதான் படத்தின் மிகப் பெரும் குறை. அவற்றை மேலோட்டாகவே சொல்லியிருக்கலாம்.

வன்முறை, ரவுடியிசம் எனக் காட்டினாலும் அதனால் வரும் பாதிப்புகளை கிளைமாக்சில் ‘சிறை ஒரு நரகம்’ என ஒரு வசனத்தில் சொல்லி எச்சரிக்கை செய்கிறார்கள்.