ஒரு நாள் இரவில் - விமர்சனம்
21 Nov 2015
தயாரிப்பு - தின்க் பிக் ஸ்டுடியோஸ், பால் சன்ஸ் மீடியா பி.லிட்., வெளியீடு - ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் இயக்கம், படத் தொகுப்பு - ஆன்டனி இசை - நவீன் ஒளிப்பதிவு - எம்.எஸ்.பிரபு வசனம் - யூகி சேது கதை - ஜாய் மேத்யூ நடிப்பு - சத்யராஜ், அனு மோல், வருன், யூகி சேது மற்றும் பலர். வெளியான தேதி - 20 நவம்பர் 2015 சத்யராஜ், சிங்கப்பூரில் வேலை செய்து விட்டு சென்னைக்குத் திரும்பியிருப்பவர். அவர் வீட்டிற்கு முன் அவருக்குச் சொந்தமான மூன்று கடைகள் இருக்கின்றன. அவற்றில் ஒரு கடை காலியாக இருக்கிறது. அந்தக் கடைக்கு யாரும் வாடகைக்கு வராமல் இருக்கிறார்கள். அந்தக் கடையில் இரவு நேரங்களில் நண்பர்களுடன் மது அருந்துவார். ஒரு நாள் அப்படி மது அருந்தியிருக்கும் போது அவருக்கு ஏற்படும் பெண் சபலத்தால் விலை மாதான அனு மோலை அந்த காலி கடைக்குள் அழைத்து வருகிறார். அவர்களை கடைக்குள் உள்ளே வைத்து பூட்டி விட்டு சத்யராஜுக்கு எடுபிடி வேலைகளைச் செய்யும் ஆட்டோ டிரைவர் வருன் டிபன் வாங்குவதற்காக போய்விடுகிறார். வெளியில் போன வருன் வேறு ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்ள, கடைக்குள் சத்யராஜும், அனுமோலும் மாட்டிக் கொள்ள மானம் போகாமல் அந்தக் கடைக்குள் இருந்து எப்படி வெளியேறுவது என சத்யராஜ் முயற்சிக்கிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. மேலே சொன்ன கதைச்சுருக்கம் ஒரு மையக் கதையின் சுருக்கமே. அதோடு ஆட்டோ டிரைவரான வருன், மீண்டும் படம் இயக்க வாய்ப்புத் தேடும் சீனியர் இயக்குனர் யூகி சேது, சத்யராஜுக்கு சொந்தமான ஒரு கடையில் வாடகைக்கு இருந்து கொண்டு சத்யராஜுடனே அடிக்கடி சண்டைக்குப் போகும் ஒருவர், சத்யராஜின் நண்பர்கள், சத்யராஜின் மகள், அந்த மகளின் நண்பன், சத்யராஜின் மனைவி ஆகியோர் எப்படி கதையை நகர்த்த உதவும் கதாபாத்திரங்களாக இருக்கிறார்கள் என்பதுதான் படத்தின் திரைக்கதை யுத்தியில் உள்ள முக்கிய விஷயம். ஒரு கடைக்குள் சிக்கிக் கொண்ட இருவரை வைத்துதத்தான் முக்கியமான நிகழ்வே நடக்கிறது என்றாலும் அதை சிறிதும் போரடிக்காமல் மற்ற கதாபாத்திரங்களின் சம்பவ நிகழ்வு இடங்களையும் சுவாரசியமாகப் படத்தில் சேர்த்து அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு முடிவையும் கொடுத்திருப்பது ரசனையாக அமைந்திருக்கிறது. இளம் நாயகர்களை மட்டுமே நம்பியிருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு முதிர்ந்த நாயகனை மையமாக வைத்து ரீமேக் படமாக இருந்தாலும் தமிழிலும் ஒரு யதார்த்த சினிமாவாகக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள். வழக்கம் போலச் சொல்வதாகத் தெரிந்தாலும் சத்யராஜும், அனுமோலும் அந்தக் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ஒரு நடுத்தர வயதுக் குடும்பத் தலைவராக சத்யராஜை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் பார்ப்பது அவ்வளவு பொருத்தமாக உள்ளது. ‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு சத்யராஜுக்கு இந்தப் படமும் பேர் சொல்லும் படமாக அமையும். அனுமோலிடம் அனைத்து நகைகளையும் கழட்டிக் கொடுத்துவிட்டு, இனிமேலாவது அமைதியா இரு என்று சொல்லும் போதும், கிளைமாக்சுக்கு முன்பாக பெற்ற மகளைப் பார்வையாலேயே பார்த்து தன் நன்றியைத் தெரிவிப்பதிலாகட்டும் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை இந்தப் படத்திலும் மீண்டும் நிரூபித்திருக்கிறார் சத்யராஜ். பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு, ஆட்டோவில் செல்லும் சத்யராஜை ஒரு மேல் பார்வை, கீழ் பார்வை, வெட்டுப் பார்வைப் பார்த்து தான் யார் என்பதை அந்த ஒரு பார்வையிலேயே நிரூபித்திவிடுகிறார் அனுமோல். இப்படிப்பட்ட திறமையான நடிகையை தமிழ் சினிமா இன்னும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இனியாவது அவருக்கு நல்ல இயக்குனர்களின் பார்வை அனுமோல் மீதும் விழட்டும். புதுமுகம் வருன், நிஜத்தில் பெரிய வீட்டுப் பிள்ளை என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். நிஜமான ஆட்டோ டிரைவரைத் தன் தோற்றத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். தோற்றத்தோடு முதல் படமா என்று சொல்ல முடியாதபடி முத்திரை பதிக்கும் நடிப்பையும் கொடுத்திருக்கிறார். யூகி சேது பேசுவதை மட்டும் காதைத் தீட்டிக் கொண்டு கேட்க வேண்டும் போலிருக்கிறது. ஆனால், படத்தில் மற்ற கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களில் யூகி சேது தெரிகிறார். படத்திற்கு வசனம் எழுதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துமிருக்கிறார். சத்யராஜ் மகளாக நடித்திருக்கும் அந்தப் பெண் இந்தக் காலத்துப் பெண்களின் நட்பையும், பெற்றோர்கள் மீது வைத்திருக்கும் பாசத்தையும் ஒரே காட்சியில் யதார்த்தமாய் வெளிப்படுத்திவிடுகிறார். அந்த ஒரு காட்சிக்கு தியேட்டரில் கைதட்டல்கள் அதிகம் ஒலிக்கிறது, கை தட்டுவது அனேகமாக இளைஞர்களாகத்தான் இருக்கும். நவீன் பின்னணி இசையும், ஒரு இடத்தில் பெரும்பாலான காட்சிகள் இருப்பதும் தெரியாத அளவிற்கு ஒளிப்பதிவும், கதையை அதன் போக்கில் பயணிக்க வைக்கும் படத் தொகுப்பும் இந்த இரவை இன்னும் வெளிச்சமாக்குகிறது. ஒரு நாள் இரவில் - இருட்டை விரட்டிய வெளிச்சம்