கரையோரம் - விமர்சனம்
03 Jan 2016
ஒரு நாயகியை முதன்மைப்படுத்திய ஒரு கிளாமரான படத்தைப் பார்த்து எவ்வளவோ நாட்களாகிவிட்டது. அந்த ஒரு ஈர்ப்புக்கும், கவர்தலுக்கும் காரணமாக இந்தப் படத்தில் இருப்பவர் படத்தின் நாயகி நிகிஷா பட்டேல். ஒரு பேய், ஒரு சஸ்பென்ஸ், ஒரு திருப்புமுனை என பரபரப்புக்குரிய பல விஷயங்களை வைத்து தொய்வில்லாமல் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். அப்பாவின் மரணம், அடுத்து தங்கை, தங்கை குழந்தையின் மரணம் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட கோடீஸ்வரப் பெண்ணான நிகிஷா பட்டோல் மன அமைதிக்காக அழகான கடற்கரையோரம் ஒரு தனி பங்களாவில் வந்து தங்குகிறார். அப்போது வசிஷ்டாவுக்கும் அவருக்கும் ஏற்படும் பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது. ஆனால், வசிஷ்டா உயிரோடு இல்லை, அவர் இறந்து பல வருடங்களாகிவிட்டது என்று அங்கு வசிப்பவர்கள் நிகிஷாவைப் பயமுறுத்துகிறார்கள். நடக்கும் சம்பவங்களும், சந்தர்ப்பங்களும் நம்பும்படியாகவே இருக்கின்றன. ஒரு கட்டத்தில் எதிர்பாராத திருப்பம் ஒன்று நடக்கிறது, அதன் பின்தான் வசிஷ்டா என்பவர் உண்மையிலே இருக்கிறாரா அல்லது பேயாக சுற்றிக் கொண்டிருக்கிறாரா என்பது நிகிஷாவுக்குத் தெரிய வருகிறது. அந்த மர்மமான சம்பவங்களுக்கு கிளைமாக்ஸ் விடை சொல்கிறது. தமிழ், கன்னடத்தில் எடுக்கப்பட்டுள்ள படம் என்பதால் இரு மொழிகளுக்கும் பொதுவான நடிகர்கள் படத்தில் நடித்திருக்கிறார்கள். நாயகன் வசிஷ்டாவைப் பார்ப்பதற்கு ‘நான் ஈ’ சுதீப் போலவே இருக்கிறார். ஆக்ஷனிலும், நிகிஷாவுடனான காதல் நடிப்பிலும் குறையில்லாமல் நடித்திருக்கிறார். படம் மொத்தத்தையும் நிகிஷாதான் தாங்கிப் பிடிக்கிறார். அவருக்கு மட்டும் மேக்கப்பிலும் சரி, ஆடைகளிலும் சரி, ஒளிப்பதிவாளர் அவருக்கு வைக்கும் ‘ஃபிரேமிலும்’ சரி பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள். படத்தை இயக்கிய ஜேகேஎஸ் கண்டிப்பாக நிகிஷாவின் ரசிகராகவும் இருக்கக் கூடும். அவருடைய அந்த ரசனை படம் பார்க்கும் ரசிகர்களையும் தொற்றிக் கொள்கிறது. நிகிஷாவின் நெருங்கிய தோழியாக இருக்கும் இனியா படத்தில் திருப்புமுனையைக் கொடுக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சிம்ரன் கிளைமாக்ஸுக்கு முன்பாகத்தான் என்ட்ரி என்றாலும், பூ ஒன்று புயலாக மாறியதே என திகைக்க வைக்கிறார். மனோபாலாவின் மொக்கையான நகைச்சுவையை படத்தில் தவிர்த்திருக்கலாம். அவை மட்டும் படத்திற்கு ஸ்பீட் பிரேக்கராக அமைந்துவிட்டது. ஒரு கடற்கரையோரம், அழகான பங்களா, லைட் ஹவுஸ் என லொகேஷன்களைத் தேடிப் பிடித்து படமாக்கியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் ஜெய் ஆனந்த் கரையோரத்தை கலர்ஃபுல்லாகக் காட்டியிருக்கிறார். சுஜித் ஷெட்டியின் பின்னணி இசை காட்சிக்குக் காட்சி விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது. திக் திக்குடன், ரசிக்க வைக்கும் அழகுடன் - கரையோரம்