ஓஹோ எந்தன் பேபி – விமர்சனம்

11 Jul 2025

காதல் என்பது நிஜ வாழ்க்கையில் எப்படி காலத்திற்கேற்ப மாறுகிறதோ, அது சினிமாவிலும் எதிரொலிக்கிறது. இந்தக் காலத்து காதல் எப்படி இருக்கிறது என்பதை இளமை ததும்ப சொல்லியிருக்கும் மற்றுமொரு படம் இது. அறிமுக இயக்குனர் கிருஷ்ணகுமார் ராமகுமார், அறிமுக நடிகரை வைத்து கலகலப்பான காதல் கதையாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.

எப்போதுமே சண்டை போட்டுக் கொண்டிருக்கும் அப்பா, அம்மாவைப் பார்த்து சிறு வயதிலிருந்தே மனமுடைந்து இருப்பவர் ருத்ரா. இஞ்சினியரிங் முடித்த பிறகு சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று முயற்சிக்கிறார். நடிகர் விஷ்ணு விஷாலைப் பார்த்து கதை சொல்கிறார். முதலில் அவர் சொன்ன கதைகளை விஷ்ணு விஷால் பிடிக்கவில்லை என்கிறார். அதன்பின் தன்னுடைய காதல் கதையை சொல்கிறார் ருத்ரா. அவரது பள்ளி காலத்தில் நடந்த காதல், கல்லூரி படித்த பின்பு வந்த ஒரு காதல் என ஆரம்பிக்கிறார். இரண்டு காதலுமே பிரிவில் முடிந்தவை. அந்தக் கதை பிடித்துப் போன விஷ்ணு விஷால், இரண்டாவது காதலியைத் தேடிப் போய் பார்த்து அப்போது என்ன நடக்கிறதோ அதை படத்தின் மீதிக் கதையாகத் தொடரச் சொல்கிறார். அதன்படி காதலி மிதிலா பால்கர்–ஐத் தேடிப் போகிறார். அதன்பின் அவர்களது காதல் என்ன ஆனது, ருத்ராவின் சினிமா கனவு என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பள்ளி காதல், கல்லூரி முடிந்த பின்பு வந்த காதல் என இரண்டு காதலிலும் நாயகனை விட நாயகிக்கு அதிக வயது உள்ள காதலாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர். படத்தில் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு முக்கியமானதாக சிறப்பானதாக அமைந்துள்ளது. நாயகன் ருத்ரா, பள்ளி காதலி வைபவி டான்ட்லி, டாக்டர் காதலி மிதிலா, அப்பா விஜயசாரதி, அம்மா கஸ்தூரி, சித்தப்பா கருணாகரன், இயக்குனராக மிஷ்கின், மேனேஜர் ரெடின் கிங்ஸ்லி, இவர்களுடன் நடிகராகவே விஷ்ணு விஷால் என நிறைய கதாபாத்திரங்கள் படத்தில் இருந்தாலும் அனைவருக்குமே ஒரு அழுத்தமான காட்சிகளைக் கொடுத்து அவர்களது கதாபாத்திரங்களை மனதில் இடம் பிடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

அறிமுக நடிகர் ருத்ராவின் நடிப்பு முதல் படம் போலத் தெரியவில்லை. காதல் உணர்வையும், அதனால் வந்த ஏமாற்றத்தையும் இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தக் காலத்தில் இளைஞர்கள் இப்படித்தான் இருக்கிறார்களோ என்று நம்பும் அளவிற்கு அவரது கதாபாத்திரமும் நடிப்பும் அமைந்துள்ளது. பள்ளி காலத்து காதலியாக நடித்திருக்கும் வைபவி, ஆரம்பத்தில் சில காட்சிகளில் வந்தாலும் காதல் நடிப்பிலும், கவர்ச்சி நடிப்பிலும் கவர்ந்திழுக்கிறார். நாயகி மிதிலா பால்கர் பார்ப்பதற்கு ‘சுப்பிரமணியபுரம்’ சுவாதியின் தங்கை போல இருக்கிறார். கதாபாத்திரத்திற்கேற்ற பாந்தமான முகம். நிதானமான யதார்த்தமான நடிப்பு. டாக்டர் கதாபாத்திரம் என்பதால் அதற்கேற்ற ஒரு மெச்சூரிட்டி நடிப்பைத் தந்துள்ளார். ருத்ரா மீதுள்ள காதலால் அவரைப் பார்க்கும் காதல் பார்வைகள் கண்ணுக்குள் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது.

இளைஞர்கள் பலருக்கும் அவர்களது உறவினர்களில் யாரோ ஒருவர் நெருக்கமானவர்களாக இருப்பார்கள். அப்படி ஒரு நெருக்கமான உறவாக எதையும் பகிர்ந்து கொள்ளும் ஒருவராக ருத்ராவின் சித்தப்பாவாக கருணாகரன். இப்படியான கதாபாத்திரங்களில் வழக்கமாக நண்பன் ஒருவரைத்தான் காட்டுவார்கள். இப்படத்தில் சித்தப்பாவை நல்ல நண்பனாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர். ருத்ராவின் பெற்றோரா எப்போதுமே சண்டை போட்டுக் கொண்டிருக்கும் கதாபாத்திரங்களில் விஜயசாரதி, கஸ்தூரி சிறப்பாய் நடித்திருக்கிறார்கள். ருத்ராவின் நண்பன் ரஸ்னா–வாக நிர்மல், இயக்குனராக கொஞ்ச நேரமே வந்தாலும் கலகலப்பாக்கம் மிஷ்கின் என மற்ற கதாபாத்திரங்களிலும் நமக்கு ஒரு நெருக்கம் வருகிறது.

நடிகராகவே வந்து நடித்துள்ளார் விஷ்ணு விஷால். ஒரு புதிய இயக்குனரிடம் இப்படித்தான் நடிகர்கள் கதை கேட்பார்களோ என சாதாரண ரசிகர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

ஜென் மார்ட்டின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் இன்றைய இளம் ரசிகர்களுக்கானவை. விளம்பரப் படங்களில் போல ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவும், பிரணவ் படத்தொகுப்பும் அமைந்துள்ளது.

பரபரவென நகர்ந்து கொண்டே இருக்கிறது திரைக்கதை. சில உணர்வுகளைக் கொஞ்சம் ஃபீல் செய்வதற்குள் அடுத்த காட்சி வந்துவிடுகிறது. கொஞ்சம் நிறுத்தி நிதானமாய் சொல்லியிருந்தால் நிறைவாக இருந்திருக்கும்.

Tags: oho enthan baby, rudra, mithila palkar, krishnakumar ramakumar, jen martin, vishnu vishal

Share via: