மிசஸ் அன்ட் மிஸ்டர் - விமர்சனம்
12 Jul 2025
வனிதா விஜயகுமார் இயக்கி, நடித்திருக்கும் “மிசஸ் அன்ட் மிஸ்டர்” திரைப்படம், ராபர்ட், ஷகிலா, பவர்ஸ்டார், பாத்திமா பாபு, செப் தாமு, ஸ்ரீமன், கிரண், ஆர்த்தி, கணேஷ், ரவிகாந்த் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ளது.
காதல் திருமணம் செய்து தாய்லாந்தில் இனிமையான வாழ்க்கை வாழ்ந்து வரும் தம்பதிகள் வனிதாவும் ராபர்ட்டும். குழந்தையின்மை குறித்து வனிதாவுக்கு வயது முதிர்ந்த பிறகு வருத்தம் ஏற்படுகிறது. தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்ற ஆசையை ராபர்ட்டிடம் பகிர்ந்து கொள்ள, அவர் அதற்கு உடன்படாததால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்படுகிறது. இதனால் பிரிந்து செல்கிறார்கள். பின்னர் வனிதா ராபர்ட்டுக்கு தெரியாமல் கர்ப்பமாகி குழந்தை பெற முடிவெடுக்கிறார். இதன்பின் நடக்கும் நிகழ்வுகளே படத்தின் மையக் கதை.
வனிதா விஜயகுமார் இயக்குனராகவும், நடிகையாகவும் தனது பங்களிப்பைச் செவ்வனே செய்துள்ளார். தனது கதாபாத்திரத்தை உணர்ச்சிப்பூர்வமாகவும், அளவாகவும் வெளிப்படுத்தி பாராட்டுதலைப் பெறுகிறார். ராபர்ட்டின் இயல்பான நடிப்பு அவரது கதாபாத்திரத்துக்கு பலம் சேர்க்கிறது. இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி படத்தில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.
ஆனால், ஷகிலாவின் நடிப்பு எதிர்பார்த்த அளவு ஈர்க்கவில்லை. அவரது இரட்டை அர்த்த வசனங்கள் படத்தின் தரத்தைப் பாதிக்கின்றன. குறிப்பாக, ஆந்திராவில் படமாக்கப்பட்ட காட்சிகள் செயற்கையாகவும், தேவையற்றவையாகவும் தோன்றுகின்றன. ஸ்ரீமனின் கதாபாத்திரம் கதைக்கு எந்தவித பங்களிப்பையும் அளிக்கவில்லை. உணர்ச்சிகரமான காட்சிகள் பார்வையாளர்களைப் பெரிதாகக் கவரவில்லை.
ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை படத்துக்கு ஒரு பலமாக அமைந்துள்ளது. தாய்லாந்தில் படமாக்கப்பட்ட காட்சிகள் காட்சி ரீதியாக கவர்ச்சிகரமாக உள்ளன. ஆனால், ஆந்திராவில் எடுக்கப்பட்ட காட்சிகள் தரத்தில் பின்தங்கியுள்ளன.
தாய்மையின் மகத்துவத்தை அழகாகச் சொல்ல வேண்டிய இந்தப் படம், தேவையற்ற ஆபாச வசனங்கள் மற்றும் செயற்கைத்தனமான காட்சிகளால் தடுமாறுகிறது. வனிதாவின் முயற்சி பாராட்டத்தக்கது என்றாலும், கதையின் ஒட்டுமொத்த தாக்கம் பார்வையாளர்களை முழுமையாக ஈர்க்கவில்லை.
குடும்ப உணர்வுகளைச் சொல்ல முயன்றாலும், சில குறைபாடுகள் படத்தின் தரத்தைப் பாதிக்கின்றன.
Tags: mrs and mr, vanitha vijayakumar