ப்ரீடம் – விமர்சனம்

11 Jul 2025

90களில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். 1991ம் வருடம் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் கூட்டத்தில் பேச வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். இலங்கையில் ஆயுதம் ஏந்தி தனி ஈழம் கேட்டு போராடி வந்த எல்டிடிஈ இயக்கத்தினர் அவரை தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி கொன்றார்கள். அப்போதும் அதற்கு முன்பும் இலங்கையிலிருந்து பல அகதிகள் தமிழ்நாட்டிற்கு வந்தார்கள். அந்த சமயத்தில் அகதிகளாக வந்த சிலர், ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்கள். அவர்களை வேலூர் கோட்டையில் சிறை வைத்து விசாரித்து வந்தார்கள். விசாரணை நீண்டதால் அங்கிருந்து சுரங்கம் தோண்டி சிலர் தப்பித்தார்கள். அவர்களில் சிலரைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை, சிலரை மட்டும் பிடித்தார்கள். அந்த விவகாரம் அப்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒன்று. அதைத்தான் இந்தப் படத்தின் கதையாக வைத்திருக்கிறார்கள்.

இலங்கையில் இருந்து இந்தியாவின் தமிழகத்திற்கு அகதிகயாக ஏற்கெனவே வந்து அடைக்கலம் ஆகி முகாமில் தங்கியுள்ளார் கர்ப்பிணியான லிஜோமோள் ஜோஸ். அவரது கணவர் சசிகுமார் ஒரு தகராறில் இலங்கையில் சில மாதங்கள் சிறையில் இருந்து பின்னர் விடுதலையாகி அகதியாக வந்து மனைவி இருக்கும் முகாமிற்கே வருகிறார். அந்த சமயத்தில் முன்னாள் பிரதமர் கொல்லப்படுகிறார். அதனால், அனைத்து அகதிகள் முகாமிலும் கடும் சோதனை நடக்கிறது. சந்தேகத்திற்கு இடமான நபர்கள் சிலரைக் கைது செய்து வேலூர் கொண்டு செல்கிறார்கள். அவர்களில் சசிகுமாரும் ஒருவர். கர்ப்பிணி மனைவியைப் பிரிந்து செல்லும் சூழலில் விசாரணை என்ற பெயரில் அங்கேயே நான்கு வருடங்களாக இருக்க வேண்டி இருக்கிறது. அதனால், அவர் அந்த சிறை முகாமில் சுரங்கம் தோண்டி தப்பிக்க நினைக்கிறார். அவருக்கு உதவியாக மேலும் சிலர் சேர்கிறார்கள். அவர்கள் சுரங்கம் தோண்டி தப்பித்தார்களா, சசிகுமார் அவரது மனைவி, குழந்தையைப் பார்த்தாரா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

இலங்கைப் பிரச்சனை, தமிழீழம், இலங்கை அகதிகள், என இலங்கைத் தமிழர்களை மையமாக வைத்து சில பல கதைகள் தமிழ் சினிமாவில் வந்திருக்கின்றன. அவற்றில் சில படங்கள் மட்டுமே உண்மைக்கு நெருக்கமாகவும் உணர்வுபூர்வமாகவும் எடுக்கப்பட்டுள்ளன. தங்களது உற்றார், உறவினர், குடும்பத்தினர், நண்பர்கள் என பலரையும் பிரிந்து சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தவர்களின் பல உண்மைச் சம்பவங்கள் இன்னும் சொல்லப்படாமல் இருக்கின்றன. இந்தப் படத்தில் எந்தத் தவறும் செய்யாமல் சிறை முகாமில் சிக்கிய சிலரது துயரத்தை நாமும் உணரும்படி கொடுத்திருக்கிறார் இயக்குனர் சத்யசிவா.

இதற்கு முன்பு வெளிவந்த ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்திலும் இலங்கைத் தமிழராக நடித்திருந்தார் சசிகுமார். ஆனால், இந்தப் படத்தின் கதாபாத்திரப் பின்னணிக்கும், அந்தப் படத்தின் கதாபாத்திரப் பின்னணிக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. மனைவி, குழந்தை ஆகியோரை நான்கு வருடங்களுக்கும் மேலாகப் பார்க்க முடியாமல், விசாரணை என்ற பெயரில் சிறை வாசத்தை அனுபவிக்கும் ஒருவரது வலியை அப்படியே வெளிப்படுத்தி இருக்கிறார் சசிகுமார். இது போன்ற இயல்பான கதாபாத்திரங்களில் அவருடைய நடிப்பும் யதார்த்தமாகவே இருக்கும். இந்தப் படத்திலும் அவருடைய நடிப்பால் அந்த வலியை நமக்கும் கடத்தி விடுகிறார்.

படம் முழுவதும் வேலூர் கோட்டை சிறையைச் சுற்றியே நடக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் சில காட்சிகள் மட்டுமே மண்டபம் அகதிகள் முகாமில் காட்டப்படுகிறது. அந்தக் காட்சிகளில் லிஜோமோள் ஜோஸின் உணர்வுபூர்வமான நடிப்பு ‘ஜெய் பீம்’ படத்தை மீண்டும் ஞாபகப்படுத்துகிறது.

மற்ற கதாபாத்திரங்களில் வயதான காலத்திலும் சிறையில் தவிக்கும் அகதியாக மு ராமசாமி. சசிகுமாருக்கு ஆதரவாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கோட்டை சிறையின் போலீஸ் அதிகாரியாக சுதேவ் நாயர், அகதிகளுக்கு உதவும் வக்கீலாக மாளவிகா அவினாஷ் குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்கள்.

ஜிப்ரானின் பின்னணி இசை உணர்வுபூர்வமான காட்சிகளில் மேலும் உணர்வைத் தருகிறது. உதயகுமார் ஒளிப்பதிவு அந்த உணர்வுகளை கதையை மீறாமல் பதிவு செய்துள்ளது.

இது ஒரு என்டர்டெயின்மென்ட் படமல்ல, சுதந்திரக் காற்றை தங்களது சொந்த நாட்டிலும், அகதியாக வந்த இடத்திலும் சுவாசிக்க முடியாத சிலரது வலிகளைச் சொல்லும் படம். 

Tags: freedom, sasikumar, satyasiva

Share via: