பறந்து போ – விமர்சனம்
04 Jul 2025
நகர வாழ்க்கைக்கும், கிராமத்து வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசம் என்ன, வசதிகள் என்னென்ன என்பதை ஒரு சிறுவனின் அனுபவம் வாயிலாக, சுவாரசியமான, இயல்பான ஒரு படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராம்.
ஒரு காலத்தில் வீட்டை விட்டு வெளியில் விளையாடி மகிழ்ந்த சிறுவர்கள், இந்தக் காலத்தில் வீட்டுக்குள்ளேயே மொபைல் கேம்ஸ் மட்டுமே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அபார்ட்மென்ட் போன்ற இடங்களில் வசிக்கும் சிலருக்கு அது ஒரு சிறை வாசம்தான். அந்த சிறைவாசத்தை விட்டு வெளியில் வந்து இயற்கை வாசத்துடன் வாழுங்கள் என்பதை இந்த ‘பறந்து போ’ பளிச்சென்று பிரகாசமாய் சொல்கிறது.
வீடு வீடாகச் சென்று ஆர்கானிக் உணவுப் பொருட்களை விற்பவர் சிவா. அவரது மனைவி கிரேஸ் ஆண்டனி ஊர் ஊராகச் சென்று புடவை ஸ்டால் போட்டு விற்பவர். அவர்களின் ஒரே மகன் எட்டு வயதான மிதுல் ரியான். வீட்டிற்குள் அவனை வைத்து பூட்டி விட்டுச் செல்வது அவர்களது வழக்கம். வெளியில் சென்று விளையாட வேண்டும், ஊர் சுற்ற வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் மிதுல் ரியான், வீட்டிற்குள் தனிமையில் இருப்பதால் அதை சிறைவாசமாகவே நினைக்கிறான். ஒரு நாள் அவன் கோபப்பட, கோயம்பத்தூரில் ஸ்டால் போட்டுள்ள நிலையில் மகனை சமாதானப்படுத்த, கணவர் சிவாவிடம் அவனை வீட்டை விட்டு வெளியில் அழைத்துப் போகச் சொல்கிறார். பைக்கில் சிவாவும், அவரது மகன் மிதுலும் புறப்பட, அவர்களது பயணம் சில நாட்கள் போகிறது. அந்தப் பயணத்தில் அவர்கள் தெரிந்து கொள்ளும் வாழ்க்கை முறை என்னவென்பதுதான் படத்தின் கதை.
அப்பா, மகனின் ஒரு பைக் பயணம். அதில் வழியில் அவர்கள் சந்திக்கும் கதாபாத்திரங்கள், அவர்கள் மூலம் கிடைக்கும் அனுபவங்கள் என சினிமாவுக்குரிய திரைக்கதை மற்றும் காட்சிகளாக இல்லாமல் நிஜமாகவே அவர்களுக்கு இப்படி ஒரு அனுபவம் கிடைத்துவிட்டதோ என்பதாகவே படம் நகர்கிறது. திரையில் ஒரு படம் பார்க்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் அவர்களது பைக் பயணத்தில் நாமும் பின்னாலேயே போய்ப் பார்க்கிறோம் என்ற உணர்வே ஏற்படுகிறது. அந்த அளவிற்குக் காட்சிகளும், கூடவே வந்து போகும் கதாபாத்திரங்களும், சிவா, மிதுல் இருவரது நடிப்பும் நம்மை அவர்களது நண்பனாக, குடும்பத்தில் ஒருவராக பாவிக்க வைக்கிறது.
கோயம்பத்தூரில் புடவை ஸ்டால் போட்ட இடத்தில் கிரேஸ் ஆண்டனிக்கு ஒரு குடும்பப் பாசம். அவருக்கு உதவியாக இருக்கும் ஒரு பெண் கதாபாத்திரம் ஊடாக ஒரு நெகிழ வைக்கும் பாசம் என அங்கும் அனுபவத்தைப் பெற வைக்கிறார் இயக்குனர் ராம். கணவன், மகனுடன் போனிலேயே பேசிக் கொண்டாலும் அவர்களது பேச்சுக்கள் அத்தனை கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தாலும் பக்கத்தில் உள்ளது போலவே பாசமாக அமைந்துள்ளது.
மிர்ச்சி சிவா போன்ற ஒரு கலகலப்பான நடிகருக்கு இப்படி ஒரு கதாபாத்திரத்தை வேறு எந்த ஒரு இயக்குனரும் யோசித்திருக்க மாட்டார்கள். அந்தக் கதாபாத்திரத்தின் தன்மை என்னவென்பதைப் புரிந்து கொண்டு அப்படியே வாழ்ந்திருக்கிறார் சிவா. அவருக்கே உரிய அந்த கமெண்ட் நகைச்சுவை படம் முழுவதும் இருப்பததான் இந்தப் படத்தைத் தொடர் கலகலப்புடன் நகர்த்தியிருக்கிறது.
இந்த வருடத்தின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதில் இப்போதே மிதுல் ரியான் பெயரை எழுதி வைத்துவிடுங்கள். இந்த வயதில் இப்படியான ஒரு கதாபாத்திரத்தில் அவ்வளவு துறுதுறுப்பாக நடிப்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல.
அஞ்சலி வந்து போகும் அந்த காட்சிகள் சில நிமிடங்களே இருந்தாலும், ஏதோ நமது முன்னாள் தோழியைப் பார்த்த ஒரு பீலிங். ஐந்தாம் வகுப்பில் நம்முடன் படித்துப் பிரிந்து போனவர்கள் இப்போது எங்கிருக்கிறார்களோ, எப்படி இருக்கிறார்களோ என்று யோசிக்க வைத்துவிட்டது. வனிதா, அனிதா, சுனிதா என எந்தவிதமான கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதற்குள் எப்படி அப்படியே ஐக்கியமாகிவிடுகிறார் அஞ்சலி என்பது ஆச்சரியம். அடிக்கடி தமிழ்ப் பக்கமும் வந்துவிட்டுப் போங்கள் வனிதா.
அஞ்சலியின் கணவராக அஜு வர்கீஸ், மிதுல் தோழியின் பெற்றோர்களாக விஜய் யேசுதாஸ், டியா. மிதுல் தோழியாக அந்த சிறுமி ஜெஸ் குக்கூ. வீட்டில் படம் பார்க்கும் போது அவர்கள் இருவரும் பார்த்துக் கொள்ளும் அந்தப் பார்வை ‘அடப்பாவிகளா’ என்று சொல்ல வைக்கிறது.
படம் முழுவதும் அடிக்கடி ஆங்காங்கே குட்டி குட்டியாய் பாடல்கள். சந்தோஷ் தயாநிதியின் இசையில் அந்தப் பாடல்களிலும் கதைக்கான பொருத்தம் நிறையவே உள்ளது. பின்னணி இசையில் வழக்கம் போல ராம் படத்துக்குரிய ஸ்பெஷல் கவனிப்பை யுவன் ஷங்கர் ராஜா தந்துள்ளார்.
சிறுவன் மிதுல் ஓடியதை விடவும் ஒளிப்பதிவாளர் என்கே ஏகாம்பரம் ஓடியதும், பிடித்ததும் அதிகமாக இருக்கும். தியேட்டரில் மூன்று பக்கமும் திரையிருந்து அதில் படத்தைப் பார்த்தால் என்ன ஒரு பரவசம் வருமோ அப்படி ஒரு பரவசம். மதியின் படத்தொகுப்பு காட்சிகளைத் தொகுத்ததில் கச்சிமாய் உள்ளது.
ராம் போன்ற இயக்குனர்களும், அவர்களது வாழ்வியல் படங்களும் தமிழ் சினிமாவில் அவ்வப்போது வந்தால் கூட போதும். அவற்றை வைத்து நீண்ட காலத்திற்கு நாம் பேசிக் கொண்டே இருக்கலாம். பறந்து பறந்து போய் பல விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்று வாருங்கள் ராம், வாழ்த்துகள்..
Tags: paranthu po, ram shiva, grance antony, yuvan shankar raja, santhosh dayanithi