3 பிஹெச்கே – விமர்சனம்

04 Jul 2025

நடுத்தரக் குடும்பத்தினர் அனைவருக்குமே சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் அல்லது எங்கோ ஓரிடத்தில் ஒரு மனை வாங்கி அதில் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையும், கனவும் இருக்கும். வாங்கும் சம்பளத்தில் எப்படி எல்லாம் மிச்சம் பிடித்து, பிள்ளைகளை படிக்க வைத்து, அவர்களுக்கான தேவைகளை கவனித்து, ஒரு ‘3 பிஹெச்கே’ அபார்ட்மென்ட் வாங்க பல வருடம் போராடும் ஒரு நடுத்தரக் குடும்பத்துக் கதையை நம் கண்முன் அப்படியே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகணேஷ்.

ஒரு சின்ன கம்பெனியில் அக்கவுண்டன்ட் ஆக வேலை பார்ப்பவர் சரத்குமார். அவரது மனைவி தேவயானி. மகன் சித்தார்த், மகள் மீதா ரகுநாத் என அளவான குடும்பம். வாடகை வீட்டில் இருக்கும் சிக்கல்களால் சொந்த வீடு வாங்க வேண்டும் என ஒரு முடிவெடுக்கிறார்கள். அதற்காக ஒரு கணக்கு போட்டு சொல்கிறார் மகள் மீதா. அதன்படி சிறுக சிறுக சேமிக்க ஆரம்பித்தாலும் திடீரென வரும் பணத் தேவையால் அந்த வீடு வாங்கும் கனவு தள்ளிக் கொண்டே போகிறது. 2005ல் ஆரம்பமாகும் அந்தப் போராட்டம் 2027 வரை நீள்கிறது. அவர்கள் ஆசைப்பட்டது போல வீடு வாங்கினார்களா, அத்தனை வருடங்களில் என்னவெல்லாம் அந்தக் குடும்பத்தில் நடந்தது என்பதுதான் படத்தின் கதை.

கதாநாயகனாக நடித்த காலத்தை விட தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் அதிகம் நடிக்கும் சரத்குமாருக்கு இந்தப் படமும் ஒரு முக்கியமான படமாக அமைந்துள்ளது. மகன் சித்தார்த் எப்படியாவது நன்றாகப் படித்து வாழ்க்கையில் முன்னேறி தனக்குக் கை கொடுப்பார் என எதிர்பார்த்து ஏமாந்து போகும் ஒரு கதாபாத்திரம். மகளின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்ற சராசரி அப்பாவின் எண்ணம். தான் பார்க்கும் வேலையில் முதலாளிக்கு விசுவாசமாகவே கடைசி வரை உழைக்க வேண்டும் என நினைக்கும் ஒருவர். அந்த வாசுதேவன் கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்திப் போகிறார். ஆனால், படம் முழுவதும் ஒரு சோகத்துடனேயே அவரை பேச வைத்திருப்பதை இயக்குனர் தவிர்த்திருக்கலாம்.

மகன்கள் மீது அப்பாக்கள் கனவு காண்பதும், அப்பாக்களின் கனவை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் மகன்களை காலம் காலமாக பார்த்து வருகிறோம். படிப்பே ஏறாத சித்தார்த் அதனால் தனக்கு நேரும் அவமானங்களைப் பார்த்து கூனிக் குறுகிப் போவதில் யதார்த்தமாய் நடித்திருக்கிறார். எப்படியாவது அப்பாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என எங்கெங்கோ வேலை செய்து எவ்வளவோ முயற்சிக்கிறார். தனக்குப் பிடித்ததையும் செய்ய விடாமல் தன் மீது திணிக்கப்படும் விஷயங்களால் அவர் எவ்வளவு தடுமாறுகிறார் என்பதையும் இயல்பாய் காட்டியிருக்கிறார். இப்படியான இளைஞர்கள்தான் இந்தக் காலத்தில் அதிகம் இருக்கிறார்கள். அவர்களது மன ஓட்டத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள்.

ஒரு வீட்டில் மகன், மகள் இருந்தால் அந்த வீட்டில் மகள் சொல்வதைக் கேட்கும் அப்பா தான் அதிகமாக இருப்பார். அது போலவே இந்த வாசுதேவன் வீட்டில் திறமைசாலியான மகளாகவும் இருக்கிறார் மீதா ரகுநாத். நமது வீட்டில் இருக்கும் ஒரு சகோதரியாகவே மீதாவை படம் முழுவதும் பார்க்க முடிகிறது. அண்ணன் சித்தார்த்தையும் சமயங்களில் அரவணைத்துச் செல்லும் காட்சியில் இன்னொரு அம்மாவாகவே தெரிகிறார். அவருக்கான குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் ஒரு சிக்கல் நாம் எதிர்பார்க்காத ஒன்று.

ஒவ்வொரு வீட்டிலும் தேவயானி போன்ற அம்மாக்கள்தான் அதிகம் இருப்பார்கள். கணவனையும் சமாளித்து, தங்களது பிள்ளைகளையும் அரவணைத்துச் செல்லும் பாசமான அம்மாக்கள் இருக்கும் வரை எந்த ஒரு குடும்பமும் எவ்வளவு சிக்கல்களையும் தாங்கிக் கொள்ளும். அந்தக் குடும்பத்தின் ஒரு தூணாகவே இருக்கிறார் தேவயானி.

சித்தார்த்தின் பள்ளி காலத்து தோழியாக, பின்னர் அவரது மனைவியாக கொஞ்ச நேரமே வந்தாலும் கணவனுக்கு ஆதரவாக இருக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சைத்ரா அச்சர். அடுத்தடுத்து சீரியசாகவே நகர்ந்து கொண்டிருக்கும் படத்தில் யோகி பாபு வரும் அந்த சில காட்சிகள் திடீர் அவ்வளவு ரிலாக்ஸ் ஆக உள்ளது.

அம்ரித் ராம்நாத் பின்னணி இசைக்கு படத்தில் நிறையவே வேலை. படம் முழுவதுமே உணர்வுபூர்வமாக இருப்பதால் அந்த உயிரோட்டத்தை தனது பின்னணி இசையில் கூடுதல் உணர்வைக் கொடுத்திருக்கிறார். வீட்டிற்குள்ளேயே நிறைய காட்சிகள் உள்ளன. அவற்றில் தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ஜித்தின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவு நம் வீட்டைப் பார்ப்பது போன்ற ஒரு உணர்வைத் தந்துள்ளது. தொடர் காட்சிகளை சரியாகத் தொகுத்துத் தந்திருக்கிறார் எடிட்டர் கணேஷ் சிவா.

வீடு வாங்க வேண்டும் என்ற கனவு ஒவ்வொருவருக்கும் இருக்கும். ஆனால், அதற்கான செயல்முறையில் இறங்கிய பிறகுதான் அதில் உள்ள சிக்கல்கள் என்னவென்பது நமக்குத் தெரிய வரும். எதிர்காலத்தில் அப்படி ஒரு ஆசையை வைத்துள்ள இன்றைய நடுத்தரத் தலைமுறையினருக்கு அதற்கான ஒரு சிறு பாடத்தை இந்தப் படம் கொடுத்திருக்கிறது. திட்டமிடல் என்பதுதான் பல கனவுகளுக்கான சரியான அடித்தளமாக இருக்க வேண்டும். அந்த திட்டமிடல் எப்படியெல்லாம் திசை மாறிப் போகும் என்பதை நமது நிஜ வாழ்க்கையில் அனுபவிக்காமலேயே இந்தப் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்து வரும் சென்டிமென்ட் சிக்கல்களை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

Tags: 3 bhk, sri ganesh, sarathkumar, devayani, siddharth, meetha raghunath

Share via: