பீனிக்ஸ் வீழான் - விமர்சனம்
04 Jul 2025
அண்ணனைக் கொலை செய்த எம்.எல்.ஏவை, நாயகன் சூர்யா சேதுபதி பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் வெட்டிக் கொலை செய்கிறார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் (அரசு கூர்நோக்கு இல்லம்) அடைக்கப்படுகிறார். கணவரைக் கொலை செய்த சூர்யாவைப் பழிவாங்க எம்.எல்.ஏவின் மனைவி வரலட்சுமி சரத்குமார், சிறுவர் பள்ளியிலேயே அவரைக் கொலை செய்ய திட்டமிடுகிறார். ஆனால், சூர்யா விஜய்சேதுபதி அவரது திட்டங்களை முறியடிக்கிறார். சிறுவனென எளிதாக நினைத்த சூர்யாவின் அதிரடி ஆற்றலைப் பார்த்து அதிர்ச்சியடையும் வில்லன் கோஷ்டி, அவரைக் கொலை செய்ய புதிய திட்டங்களை அரங்கேற்றுகிறது. இந்த சவால்களை எதிர்கொண்டு சூர்யா எப்படி தன்னை ஒரு வீரனாக நிரூபிக்கிறார் என்பதே ‘பீனிக்ஸ்’ படத்தின் கதை.
நாயகனாக அறிமுகமாகியிருக்கும் சூர்யா சேதுபதி, தனது முதல் படத்திலேயே ஒரு திறமையான ஆக்ஷன் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். அண்ணனின் கொலைக்கு பழிவாங்கும் உணர்ச்சி மற்றும் அதைத் தொடர்ந்து எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்கும் துணிவை, அவரது வயதுக்கு ஏற்ற துடிப்புடன் வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, ஐந்து பேரை எதிர்த்து தனியாளாக சண்டையிடும் காட்சியில், ஆக்ஷன் காட்சிகளில் தனது ஆற்றலை மிரட்டலாகக் காட்டியிருக்கிறார். குறைவாக பேசி, உடல் மொழி மற்றும் நடிப்பின் மூலம் பார்வையாளர்களை கவர்ந்து, மாஸ் ஹீரோவாக கைதட்டல் பெறுகிறார்.
சூர்யாவின் அண்ணனாக காக்கா முட்டை விக்னேஷ் நடித்திருக்கிறார். அவரது பாக்ஸிங் போட்டிக் காட்சிகள் பரபரப்பாக உள்ளது. அவருக்கும், பக்கத்து வீட்டுப் பெண்ணான அபி நட்சத்திராவுக்கும் இடையிலான காதல், அவர்களுக்கு ஏற்படும் முடிவும் இந்தப் படத்தின் சென்டிமென்ட்டுக்கு மிகவும் பலமாக அமைந்துள்ளது.
எம்.எல்.ஏவாக நடித்த சம்பத் ராஜ், அவரது மனைவியாக வரும் வரலட்சுமி சரத்குமார், நாயகனின் தாயாக தேவதர்ஷினி, வர்ஷா, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன், மூணாறு ரவி, நவீன், காயத்ரி, அட்டி ரிஷி ஆகியோர் திரைக்கதையின் ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜ், ஆக்ஷன் காட்சிகளை பரபரப்பாகவும், கதையை முன்னெடுக்கும் வகையிலும் பதிவு செய்து, படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளார். சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளி, நீதிமன்றம், கலப்பு தற்காப்புக் கலைப் போட்டி போன்ற பல்வேறு இடங்களில் நடக்கும் சண்டைக் காட்சிகளை, பார்வையாளர்களை கதையுடன் பயணிக்க வைக்கும் வகையில் வடிவமைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ், பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் படத்தின் ஆக்ஷன் தருணங்களை மேலும் உயர்த்தியுள்ளார். குறிப்பாக, பின்னணி இசை நாயகனின் மாஸ் தோற்றத்தை மேம்படுத்தி, படத்திற்கு பெரும் பலம் சேர்க்கிறது.
படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல், ஆக்ஷன் காட்சிகளை விறுவிறுப்பாகவும், தெளிவாகவும் தொகுத்து, படத்தை ஜெட் வேகத்தில் முன்னெடுத்துச் செல்கிறார்.
இயக்குநர் அனல் அரசு, ஒரு வழக்கமான பழிவாங்கல் கதையை முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில், விறுவிறுப்பாகவும், ரசிக்கத்தக்க வகையிலும் வடிவமைத்துள்ளார். படம் முழுவதும் சண்டை மற்றும் வன்முறைக் காட்சிகள் நிறைந்திருந்தாலும், கதையை சுருக்கமாகவும், வேகமாகவும் சொல்லி, பார்வையாளர்களை கட்டிப்போடுகிறார்.
வன்முறைக் காட்சிகள் சற்று தீவிரமாக இருப்பது சிலருக்கு உறுத்தலாக இருக்கலாம், ஆனால் கதையின் மையமான எளியவர்களின் வலி, அவர்களின் போராட்டங்கள் ஆகியவை இதை மறக்கடிக்கச் செய்கின்றன. வழக்கமான ஆக்ஷன் படங்களில் உள்ள கூறுகளைத் தவிர்த்து, சண்டைக் காட்சிகள் மூலமே கதையை முன்னெடுத்து, இயக்குநராக தனது திறமையை நிரூபித்துள்ளார் அனல் அரசு.
‘பீனிக்ஸ்’ ஒரு மாஸ் ஆக்ஷன் படமாக, சூர்யா சேதுபதியின் துணிச்சலான நடிப்பு, விறுவிறுப்பான திரைக்கதை, மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளின் பங்களிப்பால் பார்வையாளர்களை மிரட்டுகிறது. எளியவர்களின் வலியையும், வீரத்தையும் ஆக்ஷன் மூலம் சொல்லும் இப்படம், ரசிகர்களுக்கு ஒரு தரமான ஆக்ஷன் அனுபவத்தை வழங்குகிறது.
Tags: phoenix, suriya sethupathi, anal arasu
