அனுக்கிரஹன் - விமர்சனம்
04 Jul 2025
விஜய் கிருஷ்ணா, ஸ்ருதி கணவன், மனைவி. அவர்களது ஒரே மகன் ராகவன் முருகன். தனது தந்தையின் இளமைக் காலத்தில் அவரது ஆசைகள் நிறைவேறவில்லை என்பதை அறிந்து, அவற்றை நிறைவேற்ற முடிவு செய்கிறான் மகன் ராகவன். இது நடைமுறையில் சாத்தியமில்லை என்றாலும், டைம் டிராவல் மூலம் தந்தையின் இளமைக் காலத்திற்குப் பயணித்து, அவரது கனவுகளையும் லட்சியங்களையும் நிறைவேற்ற முயல்கிறான். இந்த நேரப் பயணம் எவ்வாறு நிகழ்ந்தது ? அவன் தன் நோக்கத்தை அடைந்தானா இல்லையா? என்பதே ‘அனுக்கிரஹன்’ படத்தின் மையக் கதை.
சிறுவன் ராகுவனாக நடித்தவர், தந்தையின் கஷ்டமான இளமைக் காலத்தை நினைத்து உருகும் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்து, பார்வையாளர்களின் இதயங்களை கலங்க வைக்கிறார். அவரது உணர்ச்சிகரமான நடிப்பு படத்தின் ஆத்மாவாக அமைகிறது.
தந்தையாக நடித்த விஜய் கிருஷ்ணா, குடும்பத்திற்காகவும், பிள்ளைகளுக்காகவும் தனது கனவுகளை தியாகம் செய்யும் ஒரு தந்தையின் வாழ்க்கையை இயல்பாகவும், ஆழமாகவும் பிரதிபலிக்கிறார்.
தந்தையின் இளமைக் காலத்தில் அவரது நண்பனாக வரும் முரளி ராதாகிருஷ்ணன், தந்தையின் வாழ்க்கை சரியான பாதையில் செல்ல வேண்டும் என்பதை உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்தி, தனது பாத்திரத்திற்கு முழு நியாயம் செய்கிறார்.
விஜய் கிருஷ்ணாவின் மனைவியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன், பாரி வாசன், ஹேமன் முருகானந்தம், தீபா உமாபதி, கிஷோர் ராஜ்குமார் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.
மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதையை ஒளிப்பதிவாளர் வினோத் காந்தி, ஒவ்வொரு காலத்திற்கும் தனித்துவமான தோற்றத்தை அழகாக பதிவு செய்து, காட்சிகளை நேர்த்தியாக வடிவமைத்துள்ளார்.
இசையமைப்பாளர் ரேஹனின் பாடல்களும், பின்னணி இசையும் கதையின் உணர்வு மற்றும் பயணத்திற்கு முழு துணையாக அமைந்துள்ளன.
படத்தொகுப்பாளர் எஸ்.கே.சதீஷ்குமார், மூன்று காலகட்டங்களையும் குழப்பமின்றி ஒருங்கிணைத்து, பார்வையாளர்களுக்கு எளிதில் புரியும் வகையில் படத்தை செதுக்கியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலம்.
இயக்குநர் சுந்தர் கிரிஷ், ஒரு மகன் தனது தந்தையின் இளமைக் கால ஆசைகளை நிறைவேற்ற முயலும் நேரப் பயணக் கதையை சுவாரஸ்யமாகவும், உணர்ச்சிகரமாகவும் விவரித்துள்ளார். டைம் டிராவல் என்பது அறிவியல் ரீதியாக சாத்தியமில்லை என்றாலும், ஆன்மீகம் மற்றும் பூர்வ ஜன்ம புண்ணியம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் இதை எளிமையாகவும், ஏற்கத்தக்க வகையிலும் விளக்கியுள்ளார்.
வித்தியாசமான கருத்தை, வலுவான கதைக்களமாக உருவாக்கி, பரபரப்பான திரைக்கதை மூலம் ஒரு சிறந்த அறிவியல்-கற்பனைக் கதையாக இயக்குநர் சுந்தர் கிரிஷ் படைத்துள்ளார்.
'அனுக்கிரஹன்’ ஒரு உணர்வுப்பூர்வமான, சிந்திக்க வைக்கும் அறிவியல்-கற்பனை படம். தந்தை-மகன் உறவையும், தியாகத்தையும் மையப்படுத்தி, நேரப் பயணம் என்ற புதுமையான கோணத்தில் வெற்றிகரமாக பயணிக்கும் இப்படம், ரசிகர்களையும் பாராட்ட வைக்கும்.
Tags: anugrahan