மூன்றாம் உலகப் போர் - விமர்சனம்
22 Jan 2016
தமிழ்த் திரையுலகில் அறிவியில் தொழில்நுட்பம் சார்ந்த கதைகளை வருவது மிகவும் குறைவு. வருடத்திற்கு ஒரு படம் வந்தாலே அது பெரிய விஷயம். இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே அந்தக் குறையை இந்த ‘மூன்றாம் உலகப் போர்’ போக்கியிருக்கிறது. இப்படத்தின் கதை இந்த 2016ல் நடக்கவில்லை. 2025ல் நடக்கிறது. இன்னும் 9 வருடங்கள் கழித்து நாமும், சீனாவும் எதற்காக மோதிக் கொள்ளப் போகிறோம் என்பதை நேரடியாகவே சொல்லியிருக்கிறார்கள். ஒரு சில கதாபாத்திரங்கள், ஒரு சில இடங்கள் என சிக்கனமாகப் படம் எடுக்கப்பட்டிருந்தாலும் திரையில் மிரட்டலாகவே உள்ளது. அதிலும் அந்த ஜெயிலும், நீர் மூழ்கிக் கப்பலும் ‘செட்’ என்றால் அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் நம்ப மாட்டார்கள். இந்திய ராணுவத்தில் மேஜராக இருக்கும் சுனில் குமார் சீன ராணுவத்திடம் கைதியாகச் சிக்கிக் கொள்கிறார். வெளி உலகத்திற்குத் தெரியாத பாதாளச் சிறை ஒன்றில் அவர் சிறை வைக்கப்பட்டுள்ளார். இந்திய மக்களைக் கொல்வதற்காக சீனாவிலிருந்து அனுப்பட்ட சீன ராணுவ வீரர்கள் காணாமல் போனதைப் பற்றி அவரிடம் சீன ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கொடுமைப்படுத்தி விசாரிப்பதும், அதிலிருந்து சுனில் குமார் தப்பித்தாரா இல்லைய என்பதும்தான் படத்தின் கதை. தாய் நாட்டை நேசிக்கும் நேர்மையான ராணுவ வீரராக சுனில் குமார். தாய்ப் பாசத்தையும், எதிரிகள் மீது காட்டும் ஆக்ரோஷத்தையும் அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். நல்ல உயரத்துடனும், நடிப்புத் திறமையுடனும் இருக்கிறார். முயற்சித்தால் முன்னணிக்கு வரலாம். சீன ராணுவ அதிகாரியாக நடித்திருக்கும் சிங்கபூர் நடிகர் வில்சன் என்ஜி-யின் செய்கைகள் கொஞ்சம் காமெடியாக இருந்தாலும், தமிழ் உச்சரிப்புடன் வாயசைத்து நடித்திருப்பது பாராட்ட வைக்கிறது. படத்தின் நாயகி அகிலா கிஷோருக்கு அதிக வேலையில்லை, வரும் ஒரு சில காட்சிகளிலும் அழுது கொண்டேயிருக்கிறார். போர் காட்சிகள், நீர் மூழ்கிக் கப்பல் காட்சிகள், ஜெயில் காட்சிகள் என விஷுவலாகவும் மிரள வைத்திருக்கிறார்கள். வேத் சங்கர் இசையில் பின்னணி இசை படத்தை பரபரப்புடன் ரசிக்க உதவுகிறது. ‘அன்பே என் அன்பே’ பாடல் அழகான மெலடியாக அமைந்துள்ளது. இன்னும் சில திருப்பு முனைக் காட்சிகளையும், அதிக கதாபாத்திரங்களையும் சேர்த்து, டீடெய்லாகச் சொல்லியிருந்தால் படத்திற்கு கூடுதல் பலத்தைச் சேர்த்திருக்கும். இருந்தாலும் இயக்குனர் சுகன் கார்த்தி முதல் படத்திலேயே துணிச்சலான ஒரு கருத்தை மனதில் பதிய வைக்கிறார். படம் பார்த்தவர்கள் இனி சீன எலக்ட்ரானிக் பொருட்களை வாங்க கண்டிப்பாக ஆசைப்பட மாட்டார்கள். மூன்றாம் உலகப் போர் - நல்ல முயற்சி