மையல் - விமர்சனம்
24 May 2025
ஏழுமலை இயக்கத்தில், அமர்கீத் இசையமைப்பில், சேது மற்றும் சம்ரிதி தாரா நடிப்பில் காதல்-த்ரில்லர் கதையாக வந்திருக்கும் படம்.
ஒரே இரவில் நடக்கும் இரண்டு வெவ்வேறு சம்பவங்கள் - ஒரு பக்கம் ஆடு திருட்டு, மறுபக்கம் கொலை - இவற்றின் விளைவுகளைப் பின்னிப் பின்னி சொல்லும் இந்தப் படம் பார்ப்பவரை முடிவு வரை பிணைத்து வைக்கிறது.
சேது ஆடு திருடும் போது தவறி கிணற்றில் விழுந்து கால் முறிவடைகிறார். அவரைக் காப்பாற்றும் சம்ரிதி, தனது மந்திரவாதி பாட்டியுடன் காட்டோரத்தில் வாழும் ஒரு மர்மமான பெண். இந்த அசாதாரண சந்திப்பிலிருந்து மலரும் காதலும், அதே இரவு நடந்த கொலை வழக்கின் தேடலும் இணைந்து படத்தை முன்னேற்றுகின்றன.
சேது தனது வாழ்க்கையின் முதல் முக்கியமான வேடத்தில் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். திருடனாகத் தொடங்கி காதலனாக மாறும் அவரது பாத்திரம் படிப்படியாக வளர்ச்சியடைவதைக் காண்பது சுவாரஸ்யமாக உள்ளது. சம்ரிதி தாராவின் அழகும் நடிப்பும் குறிப்பாக கவனிக்கத்தக்கவை. இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி படத்தின் முக்கிய வலிமையாக உள்ளது.
பி.எல். தேனப்பன் முக்கிய வில்லனாகவும், இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்த பாலா, மற்ற துணை நடிகர்களும் தங்கள் வேடங்களில் நிறைவாய் நடித்துள்ளனர்.
இயக்குனர் ஏழுமலை ஒரு சுவாரஸ்யமான கருத்தை எடுத்துக்கொண்டாலும், கதை சொல்லும் முறையில் சில தடுமாற்றங்கள் உள்ளன. திருடனுக்கும் காப்பாற்றுபவளுக்கும் இடையே உருவாகும் காதல் உறவு மேலும் விரிவாக விளக்கப்பட்டிருக்கலாம். க்ளைமாக்ஸ் காட்சிகள் உணர்ச்சிகரமாக இருந்தாலும், சில திருப்பங்கள் முன்கூட்டியே யூகிக்கக் கூடியவையாக உள்ளன.
அமர்கீத்தின் இசை படத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. "மையல்" பாடல் குறிப்பாக கவனிக்கத்தக்கது. பால பழனியப்பனின் ஒளிப்பதிவு காட்டின் அழகையும் மர்மத்தையும் சிறப்பாக பிடித்துக் காட்டுகிறது.
இந்தப் படம் ஒரு வழக்கமான காதல் கதை அல்ல - அது ஒரு திருடனின் உள்ளத்தில் மலரும் மனமாற்றத்தின் கதை. சில குறைபாடுகள் இருந்தாலும், வித்தியாசமான கதைமுறையும் கொண்ட இந்தப் படம் பரவாயில்லாமர் ரசிக்க வைத்துள்ளது.
Tags: myyal, sethu, samrithi thara