நரி வேட்டை - விமர்சனம்
24 May 2025
அனுராஜ் மனோகர் இயக்கத்தில், ஜேக்ஸ் பிஜாய் இசையமைப்பில், டொவினோ தாமஸ், சேரன், சூரஜ் வெஞ்சாரமூடு, பிரியம்வதா கிருஷ்ணன், ஆர்யா சலீம் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
டோவினோ தாமஸ் நடித்துள்ள "நரி வேட்டை" படம், சமூகத்தின் உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த கதையைச் சொல்கிறது. வேலை இல்லாத திண்டாட்டத்தில் உள்ள டோவினோ, தனது குடும்பத்தின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக போலீஸ் கான்ஸ்டபிள் வேலையை ஏற்கிறார். ஆனால், அவரது வாழ்க்கை முழுவதுமே மாறிவிடும் ஒரு சம்பவத்தில் அவர் சிக்கிக் கொள்கிறார்.
மலைவாசிகளின் அடிப்படை உரிமைகளுக்காக நடக்கும் போராட்டத்திற்கு போலீஸ் படை முழுவதுமாக ஈடுபடுகிறது. இந்த நிகழ்வுகளின் மத்தியில், டோவினோவின் மனமாற்றம் எப்படி நிகழ்கிறது என்பதே கதையின் மையக்கரு. முதலில் மலைவாசிகளை வெறுக்கும் அவர், படிப்படியாக அவர்களின் துயரத்தை உணர்ந்து, அவர்களுக்காகவே போராடும் ஒரு வீரனாக மாறுகிறார்.
டோவினோ தாமஸ் இந்தப் படத்தில் தனது நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். வேலை இல்லாத இளைஞனாக, காதலனாக, பின்னர் போராட்ட வீரனாக மாறும் அவரது கதாபாத்திரம் பார்வையாளரை உணர்ச்சிகளில் ஆழமாக ஈர்க்கிறது. சுரஜ் வெஞ்சாரமூடுன் நடித்துள்ள ஹெட் கான்ஸ்டபிள் கதாபாத்திரம் படத்திற்கு ஒரு தனி வலிமையைத் தருகிறது. தமிழ் நடிகரும், இயக்குனருமான சேரன் நரித்தனமான ஒரு கதாபாத்திரத்தில் இயல்பாய் நடித்திருக்கிறார்.
படத்தின் ஒளிப்பதிவு மலைகளின் அழகையும், போராட்டத்தின் கடுமையையும் மிகவும் எதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறது. பின்னணி இசை கதையின் மனோபாவத்திற்கு ஏற்றாற்போல் அமைந்துள்ளது. நாயகி பிரியம்வதா கிருஷ்ணனின் தோற்றம் கண்களுக்கு விருந்தாக உள்ளது.
இயக்குனர், அதிகாரத்தின் தன்னிச்சையான தன்மையை எப்படி ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை மாற்றுகிறது என்பதை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் காட்சிகள் கொஞ்சம் குறைவாக இருந்திருக்கலாம் என்றாலும், கதையின் முக்கியத்துவம் எங்கும் பாதிக்கப்படவில்லை.
"நரி வேட்டை" என்பது ஒரு சாதாரண மனிதனின் உள்ளத்தில் ஏற்படும் மாற்றத்தை அழகாகச் சொல்லும் படம். டோவினோ தாமஸின் சிறந்த நடிப்பு, எதார்த்தக் கதை, மற்றும் அழகான திரைக்காட்சிகள் இந்தப் படத்தை ஒரு மறக்கமுடியாத அனுபவமாக்குகின்றன. சமூக ரீதியான படங்களை விரும்பும் அனைவரும் இதைப் பார்க்க வேண்டும்.
Tags: nari vettai, tovino thomas, cheran