ஏஸ் - விமர்சனம்
23 May 2025
ஆறுமுககுமார் இயக்கத்தில், சாம் சிஎஸ், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகிபாபு மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
சிறையிலிருந்து விடுபட்ட விஜய் சேதுபதி, புது வாழ்வுக்காக மலேசியா செல்கிறார். யோகிபாபுவின் உதவியுடன் திவ்யா பிள்ளையின் உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்து, அங்கு ருக்மணி வசந்துடன் நட்பு வளர்க்கிறார். இந்த நட்பு காதலாக மாறும் போது, ருக்மணியின் பணப் பிரச்சனை கதையை முற்றிலும் மாற்றி விடுகிறது.
கடன் வாங்கச் சென்ற இடத்தில் சூதாட்டத்தில் சிக்கிய விஜய், ஒரு கோடி ரூபாய் கடனாளியாகி விடுகிறார். வங்கியில் கொள்ளையடிக்கத் திட்டமிடும் அவரது அடுத்த நடவடிக்கைகளே படத்தின் இரண்டாம் பாதியை ஆக்கிரமிக்கின்றன. அவரது திட்டம் வெற்றி பெறுமா? இந்த சூழ்ச்சியில் இருந்து எப்படி தப்பிப்பார்? என்பதே மீதிக் கதை.
விஜய் சேதுபதி, "போல்ட் கண்ணன்" வேடத்தில் தனது இயல்பான நடிப்புடன் கதாபாத்திரத்தை உயிர்ப்புடன் வடித்திருக்கிறார். அவரது ஸ்டைல், ஆக்ஷன் காட்சிகள் மற்றும் ரசிகர்களை கவரும் தோற்றம் படத்தின் முக்கிய ஹைலைட். ருக்மணி வசந்த் நாயகியாக அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும் தனது முத்திரையை பதித்திருக்கிறார்.
யோகிபாபுவின் காமெடி காட்சிகள் படத்திற்கு மெருகேற்றியிருக்கின்றன. அவரும் விஜயும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் திரையரங்கில் பெரும் சிரிப்பை உருவாக்கியிருக்கிறது. திவ்யா பிள்ளை, பப்ளு பிரித்விராஜ், பி.எஸ். அவினாஷ் போன்ற துணை நடிகர்கள் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நீதி செலுத்தியிருக்கிறார்கள்.
சாம் சி.எஸ். இசை பின்னணி படத்தின் முக்கியமான அங்கமாக விளங்குகிறது. ஜஸ்டின் பிரபாகரின் பாடல்கள் காதை குளிர்விக்கின்றன. கரண் பி. ராவத்தின் ஒளிப்பதிவு மலேசியாவின் அழகை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறது.
கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால், இன்னும் சிறப்பாக இருக்கும். ஆனாலும், விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபுவின் கூட்டணிக்காகவே இந்த படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம்!
Tags: ace, vijay sethupathi, rukmani vasanth, yogi babu