ஜவான் - விமர்சனம்

10 Sep 2023

அட்லீ இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்து ஹிந்தியில் உருவாகி தமிழில் டப்பிங் ஆகி வெளிவந்துள்ள படம்.

ஒரு மெட்ரோ ரயிலைக் கடத்தி 40000 கோடியை வாங்கி விவசாயிகள் கடனை அடைக்கிறார் ஷாரூக்கான். அடுத்து ஒரு அமைச்சரைக் கடத்தி 200க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு அடிப்படை வசதிகளைச் செய்ய வைக்கிறார். அதை ஷாரூக் தான் செய்கிறார் என்று தெரியாமல் அவரைக் கண்டுபிடிக்கும் வேலைகளில் இறங்குகிறார் விசாரணை அதிகாரியான நயன்தாரா. ஆனால், இருவருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணமான நாளன்றே ஷாரூக் பற்றிய உண்மைகள் அவருக்குத் தெரிய வருகிறது. இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

விக்ரம் ரத்தோர், ஆசாத் என அப்பா, மகனாக இரண்டு கதாபாத்திரங்களில் அதிரடி ஆக்ஷனில் அசத்தியிருக்கிறார் ஷாரூக். இதற்கு முன்பு அவர் நடித்த படங்களின் கதாபாத்திரங்களை மிஞ்சும் நடிப்பு இந்தப் படத்தில் உள்ளது. ஹிந்தியில் முதல் முறையாக நடித்துள்ள நயன்தாரா வழக்கம் போல ரசிகர்களைக் கவர்கிறார். வில்லத்தனத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பும் வழக்கம் போல அசத்தல்தான்.

ஷாரூக்கிற்கு உதவி செய்யும் அதிரடிப் பெண்களாக பிரியாமணி, பிரியாமணி, சான்யா மல்கோத்ரா, சஞ்சிதா பட்டாச்சார்யா, கிரிஜா ஓக், லெஹர் கான், ஆலியா குரேஷி, ஆகியோருக்குக் கொஞ்சமான நேரம்தான் என்றாலும் மனதில் நிற்கிறார்கள். சிறப்புத் தோற்றத்தில் வந்தாலும் தீபிகா அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார்.

அனிருத் இசை, ஜிகே விஷ்ணுவின் ஒளிப்பதிவு, ஆக்ஷன் காட்சிகள் அனைத்துமே படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. சில பல தமிழ்த் திரைப்படங்களை ஞாபகப்படுத்தினாலும் ஹிந்தி சினிமா ரசிகர்களுக்கு இது அனைத்துமே புதிது, மாறுபட்டது. ஆரம்பம் முதல் கடைசி வரை பரபரபபரவென நகர்கிறது படம்.
 

Tags: jawan, atlee, anirudh, sharukkhan, nayanthara, vijay sethupathi

Share via: