தமிழ்க்குடிமகன் - விமர்சனம்

10 Sep 2023

இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், சேரன், ஸ்ரீபிரியங்கா, லால் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

இறுதிச் சடங்கு செய்யும் குலத்தில் பிறந்தவர் சேரன். அத்தொழிலை விட்டு அரசாங்க வேலைக்குச் செல்ல வேண்டுமென நினைக்கிறார். இதனிடையே, அவருடைய தங்கை தீப்ஷிகாவும், மேல் சாதியைச் சேர்ந்த ஊர் பெரிய மனிதரான லால் மகன் துருவாவும் காதலிக்கிறார்கள். இது பற்றி தெரிந்த லால், தீப்ஷிகாவை உறவினர்களுடன் சேர்ந்து அடித்து காயப்படுத்துகிறார். இந்நிலையில் லால் அப்பா இறந்து போகிறார். அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய சேரனை அழைக்க அவர் வர மறுக்கிறார். இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சின்னச்சாமி என்ற கிராமத்துக் கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கிறார் சேரன். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களின் நிலையை அவரது கதாபாத்திரம் உணர்வுபூர்வமாய் எடுத்துரைக்கிறது. சேரனின் மனைவியாக ஸ்ரீபிரியங்கா, தங்கையாக தீப்ஷிகா, ஊர் பெரிய மனிதராக லால், அவரது மைத்துனராக அருள்தாஸ், லால் மகனாக துருவா உள்ளிட்டவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.

சாம் சிஎஸ் பின்னணி இசை, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு கிராமத்துப் படத்துக்குரிய உணர்வை அழுத்தமாய் தந்துள்ளது.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் குலத்தொழில், சனாதனம் ஆகியவற்றால் மக்கள் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள் என்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன்.
 

Tags: tamilkudimagan, cheran, isakki karvannan, sam cs

Share via: