பரம்பொருள் - விமர்சனம்

02 Sep 2023

அரவிந்தராஜ் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சரத்குமார், அமிதாஷ், காஷ்மீரா பர்தேஷி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

சிலை கடத்தல் பற்றிய ஒரு பரபரப்பான க்ரைம் திரில்லர் படத்தை சுவாரசியமாகக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் அரவிந்தராஜ்.

குடும்ப சூழ்நிலை காரணமாக சில திருட்டு வேலைகளைச் செய்பவர் அமிதாஷ். ஒரு நாள் இன்ஸ்பெக்டரான சரத்குமார் வீட்டில் திருடும் போது மாட்டிக் கொள்கிறார். ஒரு சிலை கடத்தல் வழக்கு பற்றி சரத்குமாருக்குத் தெரிந்த நிலையில் அந்த சிலைகளைப் பற்றித் தேடித் தரும்படி அமிதாஷிடம் கேட்கிறார். வேறு வழியில்லாமல் அதற்கு சம்மதிக்கிறார் அமிதாஷ். இருவரு சேர்ந்து சிலை கடத்தலில் ஈடுபடுகிறார்கள். ஒரு அபூர்வ சிலையை விற்று பணமாக்க முயற்சிக்கிறார்கள். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் வில்லனாக நடித்த அமிதாஷ், இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஆதி கதாபாத்திரத்தில் குறிப்பிடும்படி நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவிற்கு மற்றுமொரு இளமையான கதாநாயகன் ரெடி.

சமீபத்தில் வெளிவந்த ‘போர் தொழில்’ படம் சரத்குமாருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து இந்தப் படமும் அவருக்கு அமையும். இந்தப் படத்தில் இன்ஸ்பெக்டராக நடித்திருந்தாலும் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் முழுவதும் இருக்கும் மற்றொரு கதாநாயகனாக தனது அனுபவத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சில காட்சிகளில் வந்தாலும் அழகான கதாநாயகியாக வந்து போகிறார் காஷ்மீரா. 

படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை, பாண்டிகுமார் ஒளிப்பதிவும் சிறப்பாக அமைந்து இயக்குனருக்கு பலமாக உள்ளது. 

படத்தில் பாடல்களை நீக்கியிருந்தால் தவறாகியிருக்காது. கிளைமாக்ஸ் காட்சிகள் நாம் சிறிதும் எதிர்பாராதது. சமீபத்தில் பார்த்த படங்களில் குறிப்பிடும்படியான கிளைமாக்ஸ்.

Tags: paramporul, aravind raj, amitash, sarathkumar, yuvan shankar raja

Share via: