பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், யோகிபாபு, ரெய்ச்சல் ரெபேக்கா, வீரா மற்றும் பலர் நடித்துள்ள படம்.

வாழ்க்கையில் எதுவுமே சரியாக நடக்காத, அதிர்ஷ்டமில்லாதவர் யோகிபாபு. அவருக்கு ஒரு அதிர்ஷ்டக் குலுக்கலில் கார் பரிசாகக் கிடைக்கிறது. அந்தக் காரை வைத்துக் கொண்டு அவர் செய்யும் ரியர் எஸ்டேட் புரோக்கர் வேலையில் முன்னேற நினைக்கிறார். ஆனால், இன்ஸ்பெக்டரான வீராவுடன் ஒரு பிரச்சினையில் மோதுகிறார். இதனிடையே, யோகிபாபுவின் கார் காணாமல் போய்விடுகிறது. இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இடைவேளை வரை படத்தை விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். யோகிபாபுவின் குடும்பப் பின்னணி, அவரது கதாபாத்திரம், மனைவி ரெய்ச்சல் கதாபாத்திரம், மகன் கதாபாத்திரம் ஆகியவை யதார்த்தமாக அமைந்து, அவர்களும் இயல்பாக நடித்துள்ளனர். யோகிபாபுவுக்கு எந்த கஷ்டத்திலும் உதவியாக இருக்கும் நண்பன் அப்துல் லீ கூட சிறப்பாய் நடித்திருக்கிறார். தான் செய்வது மட்டுமே சரி என்ற மனோபாவத்தில் இருக்கும் இன்ஸ்பெக்டராக வீரா. இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும், அதில் அவர்களது நடிப்பும்தான் இந்தப் படத்திற்கான பலம்.

ஷான் ரோல்டன் பின்னணி இசை பக்கபலமாய் அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் சந்தீப் கே விஜய்யும் இயக்குனருக்கு கை கொடுத்திருக்கிறார்.

இவ்வளவு சிறப்பாக சில விஷயங்களைச் செய்த இயக்குனர் பாலாஜி, இடைவேளைக்குப் பிறகான திரைக்கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். காரைத் தேடி யோகிபாபு அலைவதில் இடைவேளைக்கு முன்பாக இருந்த யதார்த்தம் மிஸ்ஸிங். இருந்தாலும் ரசிக்கும்படியான ஒரு படம்தான் இந்த ‘லக்கிமேன்’.