விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், ஜிவி பிரகாஷ்குமார், கௌரி கிஷன், வெங்கட் பிரபு மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

டைம் டிராவலில் ஒரு காதல் படம். ‘ஆல்டர்நேட் ரியாலிட்டி, பேரலல் வேர்ல்டு’ என வேறு ஒரு காதல் உலகத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார் இயக்குனர்.

பள்ளியில் படித்த காலத்திலேயே கௌரி கிஷனை ஒருதலையாய் காதலித்தவர் ஜிவி பிரகாஷ். ஆனால், அந்தக் காதலை சொல்லாமலேயே இருக்கிறார். விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைப்பவருக்கு கௌரி கிஷனின் ஒரு பேட்டி புதிய நம்பிக்கையைத் தருகிறது. கௌரியிடம் காதலைச் சொல்ல முடிவெடுக்கிறார். அப்படி போகும் போது விபத்தில் சிக்கிவிடுகிறார். விபத்துக்குப் பின் வேறு ஒரு உலகத்திற்குச் செல்கிறார். அங்கு ஜிவி பிரகாஷ் சினிமா இசையமைப்பாளராகவும், கௌரி கிஷன் அவரது மனைவியாகவும் இருக்கிறார்கள். இரண்டு உலக எண்ணங்களுடன் இருக்கும் ஜிவி பிரகாஷ் வேறு உலகத்தை விட்டு இந்த உலகத்திற்கு வருகிறார். இங்கு ஜிவியின் நண்பரை கௌரி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இதற்கடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை. 

சரியான வேலையில்லாமல், விரக்தியில் இருக்கும் இளைஞன் ஜீவாவாக ஒரு உலகத்திலும், சினிமா இசையமைப்பாளராக, அழகானை மனைவியுடன் அர்ஜுன் ஆக வேறு உலகத்திலும் என இரு விதமான எண்ணங்களில் வாழும் கதாபாத்திரம் ஜிவிக்கு. இரண்டிலுமே அந்தந்த கதாபாத்திரங்களுக்கேற்றபடி நடித்திருக்கிறார்.

இந்த உலகத்திலும், வேறு உலகத்திலும் மற்ற கதாபாத்திரங்கள் மாறி மாறி இருந்தாலும் கௌரி கிஷனின் கதாபாத்திரம் மட்டும் அப்படியே இருக்கிறது. இந்த உலகத்தில் திருமணமாகாமலும், அந்த உலகத்தில் திருமணம் ஆனவராக இருப்பது மட்டுமே வித்தியாசம். ஜிவி, கௌரி இருவர் இடையிலான காதல் நடிப்பு மிக இயல்பாய் அமைந்து ரசிக்க வைக்கிறது.

இவர்களுக்கடுத்து முக்கிய கதாபாத்திரத்தில் வெங்கட் பிரபு, ஜிவியின் நண்பர்களாக ஆர்ஜே விஜய், மதும்கேஷ். 

ஜஸ்டின் பிரபாகரன் பாடல்களை விட பின்னணி இசையில் அதிக ஈடுபாட்டுடன் உழைத்திருக்கிறார்.

கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் நமக்கு சற்றே குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. மற்றபடி புதிய கதைக்களம், புதிய கதாபாத்திரங்கள் என வித்தியாசமாய் முயற்சித்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.