வான் மூன்று - விமர்சனம்
11 Aug 2023
எஎம்ஆர் முருகேஷ் இயக்கத்தில், ஆதித்யா பாஸ்கர், வினோத் கிஷன், அம்மு அபிராமி, அபிராமி, டெல்லி கணேஷ், லீலா சாம்சன் மற்றும் பலர் நடிக்க, ஆஹா ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியிருக்கும் படம்.
மூன்று விதமான ஜோடியின் வாழ்க்கையைச் சொல்லும் படம் என்பதால்தான் ‘வான் மூன்று’.
ஆதித்யா அவர் காதலித்த பெண் ஏமாற்றியதற்காக தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். தான் காதலித்த ஆண் ஏமாற்றியதற்காக அதே மருத்துவமனையில் வந்து சேர்கிறார் அம்மு அபிராமி. காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட இவர்கள் இருவருக்கும் மெல்ல மலரும் காதல் ‘வான் ஒன்று’.
கிறிஸ்துவரான வினோத் கிஷன், பிராமணப் பெண்ணான அபிராமியை திருமணம் செய்து கொண்டவர். மூளை சம்பந்தப்பட்ட நோய் ஒன்றால் உயிருக்குப் போராடும் அபிராமி அவரது அப்பாவைப் பார்க்க ஆசைப்படுகிறார். அவரது ஆசையை நிறைவேற்ற நினைக்கிறார் கணவர் வினோத். இது ‘வான் இரண்டு’.
வயதான தனது மனைவி லீலா சாம்சன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்தில் சேர்த்துள்ளவர் கணவர் டெல்லி கணேஷ். சிகிச்சை செலவுக்காக மகனிடம் உதவி கேட்டு செல்கிறார். ஆனால், அந்த உதவி அவருக்குக் கிடைக்கவில்லை. மனைவி சிகிச்சைக்கு அவருக்கு பணம் கிடைத்ததா இல்லையா, மனைவியின் உயிரைக் காப்பாற்றினாரா என்பதுதான் ‘வான் மூன்று’.
வயதான தம்பதி, காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி, காதலில் தோல்வியுற்று ஜோடியாக மாற நினைக்கும் இருவர் என ஒரு எளிய கதையை எடுத்துக் கொண்டு அதை உணர்வு பூர்வமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் முருகேஷ். மூன்று ஜோடிகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையான விஷயம் ‘அன்பு’. அந்த அன்பு அவர்களை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்பதை இயல்பாகக் கையாண்டிருக்கிறார் இயக்குனர்.
ஆதித்யா பாஸ்கர் - அம்மு அபிராமி, வினோத் கிஷன் - அபிராமி, டெல்லி கணேஷ் - லீலா சாம்சன் மூன்று ஜோடியுமே அவரவர் கதாபாத்திரங்களில் அவ்வளவு இயல்பாய் நடித்திருக்கிறார்கள். அவர்கள் நடிக்கிறார்கள் என்று சொல்வதை விட அவர்கள் இருக்கும் மருத்துவமனைக்கு நாமும் ‘விசிட்டர்’ ஆக சென்று பார்த்த உணர்வை அவர்கள் கொடுக்கிறார்கள்.
மருத்துவமனையைச் சுற்றியே அதிகக் காட்சிகள் நகர்வதும், சில காட்சிகளில் ஒருவித டிராமாத்தனம் இருப்பதும் மட்டுமே குறையாகத் தெரிகிறது. மற்றபடி அன்பால் அனைவரையும் கட்டிப் போட முயல்கிறார் இயக்குனர்.
Tags: vaan moondru, murugesh, ammu abirami, adithya baskar, vinoth kishan, abhirami