ஜெயிலர் - விமர்சனம் 

10 Aug 2023

நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், வசந்த் ரவி, விநாயகன், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், சுனில், தமன்னா, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

‘காலா, பேட்ட, தர்பார், அண்ணாத்த’ என சோர்ந்து போயிருந்த ரஜினி ரசிகர்களுக்கு ‘எனர்ஜி’யை ஏற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பார்த்துப் பார்த்து காட்சிகளை வைத்து ‘ரஜினியிசம்’ என்பதை படம் முழுவதும் தெறிக்கவிட்டிருக்கிறார் இயக்குனர் நெல்சன். நேரடியான சண்டைக் காட்சிகள் எதுவும் இல்லாமல் இப்படி ஒரு ஆக்ஷன் படத்தைக் கொடுக்க முடியும் என புதிய பாதை ஒன்றையும் காட்டியிருக்கிறார் இயக்குனர். 

ரஜினிகாந்த் பேசும் பன்ச் வசனங்கள், அவரது நடை, உடல் மொழி என ரசிகர்களுக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அதெல்லாம் வேறு ஒரு கோணத்தில் அமைந்திருக்கிறது. தன்னை வேறு ஏதோ ஒரு கோணத்தில் காட்ட நெல்சன் முயற்சிக்கிறார் எனத் தெரிந்து அதற்கேற்றபடி வழக்கமாக இல்லாமல் மாற்றியும் நடித்து கவர்ந்திருக்கிறார் ரஜினிகாந்த்.

நேர்மையான ஜெயிலர் ‘டைகர் முத்துவேல் பாண்டியன்’ ஆக இருந்து ஓய்வு பெற்று மனைவி, மகன், மருமகள், பேரன் என அமைதியான வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவரது மகன் வசந்த் ரவி அசிஸ்டென்ட் கமிஷனர். சிலை கடத்தல் கும்பலை பிடிக்கப் போய் அவர் காணாமல் போகிறார். அவர் கொலை செய்யப்பட்டுவிட்டார் என போலீஸ் தலைமையே சொல்லிவிட அதிர்ச்சியடைகிறார் ரஜினி. அதோடு, அவருடைய பேரனையும் கொல்ல முயற்சி நடக்கிறது. குடும்பத்தினர் அனைவரையும் கொல்வேன் என வில்லன் மிரட்டுகிறார். அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த், தன் குடும்பத்தினரைக் காப்பாற்ற ‘டைகர்’ பாதைக்கு மீண்டும் திரும்புகிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இத்தனை வயதிலும் இப்படி ஒரு ஈர்ப்பு தமிழ் சினிமாவில் வேறு எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காது. நாம் படம் பார்த்தது ஹைதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட பிரசாத் தியேட்டரில். தமிழ் பேசும் மக்களுடன் தெலுங்கு பேசும் மக்களும் படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்குக் குடும்பத்துடன் வந்து படம் பார்த்தது மாபெரும் ஆச்சரியம். ‘சூப்பர் ஸ்டார்’ என இனி யாருமே பேசக் கூடாது என படம் பார்த்து வெளியில் வந்த ஒரு ரசிகர் ஆவேசப்பட்டுக் பேசிக் கொண்டிருந்தார். ஆம், அது உண்மையும் கூட. காட்சிக்குக் காட்சி ரஜினியைப் பார்த்து தியேட்டரில் ரசிகர்கள் ஆர்ப்பரித்தது வேறு எந்த ஒரு தமிழ் நடிகருக்கும் இத்தனை வயதில் கிடைக்காத ஒன்று. அப்பாவாக, தாத்தாவாக, பிளாஷ்பேக்கில் அதிரடி காட்டிய டைகர் ஆக ரஜினி தனது ரசிகர்களை மட்டும் திருப்திப்படுத்தாமல் அனைத்து ரசிகர்களையும் திருப்திப்படுத்தி இருக்கிறார்.

ரஜினிக்குப் பிறகு படத்தின் வில்லன் ஆன விநாயகன் கதாபாத்திரத்திரம்தான் அதிகக் காட்சிகளில் வருகிறது. மிகச் சாதாரண தோற்றத்தில் லுங்கி, பனியன் என இருப்பவர் நடிப்பில் ரஜினியை எதிர்க்கும் காட்சிகளில் ஆவேசம் காட்டுகிறார். ‘திமிரு’ படத்தில் ஒரு அடியாள் கதாபாத்திரத்தில் நடித்தவரா இவர் என ஆச்சரியப்பட வைக்கிறார். ரஜினியின் மகனாக வசந்த் ரவி, இவரது கதாபாத்திரத்தில் ஒரு சஸ்பென்ஸ் இருக்கிறது.

படத்தில் கதாநாயகி இருந்தே ஆக வேண்டும் என்ற க்ளிஷேவை உடைத்திருக்கிறார் இயக்குனர் நெல்சன். ஒரு பாடலுக்காக தமன்னா கதாபாத்திரம் கொஞ்சம் திணிக்கப்பட்டது போலத் தெரிந்தாலும் அந்தப் பாடல் இடம் பெறுவது அந்தக் கதையோட்டத்தில் ரிலாக்ஸ்ட் ஆக மாற்றுகிறது. 

மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ரஜினிக்கு உதவி செய்வதற்காக வந்து போகிறார்கள். அதே சமயம் கிளைமாக்சில் அவர்களை மீண்டும் வரவழைத்து ஒரு அதிரடி காட்டிவிட்டார் இயக்குனர். ரம்யா கிருஷ்ணன், மிர்னா, மாஸ்டர் ரித்விக் ஆகியோரும் வந்து போகிறார்கள்.

இடைவேளை வரை ரஜினிகாந்தை அடிக்கடி கிண்டலடித்து கடைசியில் அவரிடமே மாட்டிக் கொண்டு சிரிக்க வைக்கிறார் யோகி பாபு. இடைவேளைக்குப் பின் தெலுங்கு நடிகர் சுனில், தமன்னா காதல் என வேறு டைப்பான காமெடியும் படத்தில் இருக்கிறது.

அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பிளஸ்பாயின்ட். ‘காவலா’ பாடல் தியேட்டரையே ஆட வைக்கிறது. விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு, ஸ்டன் சிவா சண்டைப் பயிற்சி, கிரண் அரங்க அமைப்பு படத்திற்கு பிளஸ் பாயினிட்.

இடைவேளைக்குப் பின் சில காட்சிகளை நீக்கியிருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக நகரும். மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோரது காட்சிகள் இன்னும் கொஞ்ச நேரம் வந்திருக்கலாம்.

ஜெயிலர் - ஜெயிக்கப் பிறந்தவர்…

Tags: jailer, nelson, anirudh, rajinikanth, tamannah

Share via:

Movies Released On July 27