சான்றிதழ் - விமர்சனம்

05 Aug 2023

ஜேவிஆர் இயக்கத்தில், பைஜு ஜேக்கப் இசையமைப்பில், ஹரிகுமார், ரோஷன் பஷீர், ஆஷிகா அசோகன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கிராமம் ‘கருவறை‘. அந்தக் கிராமத்து மக்கள் அவர்களுக்கென தனி  மதில் சுவர் அமைத்து, ஊருக்குள் வெளியாட்களை விடாமல் கட்டுக்கோப்பாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த கிராமத்துக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட, அந்த விருதை கிராமத்திற்கே வந்து ஜனாதிபதி தர வேண்டும் என கருவறை கிராம மக்கள் கேட்கிறார்கள். அந்த கிராமத்துக்குள் நுழைந்து செய்தி சேகரிக்க டிவி நிருபரான ஆஷிகா செல்கிறார். மேலும், சிலர் கிராமத்துக்குள் நுழைய அவர்களைப் பிடித்து தனியறை என்ற இடத்தில் வைக்கிறார்கள். அந்த கிராமத்தில் இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் ஏன் வந்தது என்பதை பின்னர் சொல்கிறார்கள். அது என்ன என்பதுதான் மீதிக் கதை.

படத்தின் இடைவேளை வரை ‘கருவறை’ கிராமத்தின் கட்டுப்பாடுகள் என்னென்ன, அங்கு பிரச்சினை செய்வதற்கே நுழைந்த சிலர் மாட்டிக் கொண்டு தவிப்பது பற்றியே படம் நகர்கிறது. இடைவேளைக்குப் பின் ‘தறுதலை’ கிராமம் ஆக இருந்த கிராமத்தை ‘கருவறை’ கிராமமாக மாற்ற ஹரிகுமார் என்னவெல்லாம் செய்தார் என்பதைக் காட்டுகிறார்கள். நிறைய கதாபாத்திரங்கள், அடிக்கடி தடம் மாறும் திரைக்கதை என இலக்கில்லாமல் நகர்கிறது படம்.

ஊரையும், ஊர் மக்களையும் திருத்த நினைக்கும் வெள்ளைச்சாமி என்ற கதாபாத்திரத்தில் ஹரிகுமார். அவருடைய தியாகம்தான் கிராமம் இப்படி மாறக் காரணம் என பிளாஷ்பேக்கில் சில பல கதைகளைச் சொல்கிறார்கள். இடைவேளை வரை ரோஷன், ஆஷிகா காதல், ஊரில் மாட்டிக் கொள்ளும் கதிர் உள்ளிட்டோரின் கொஞ்ச கொஞ்ச காமெடி என ஏதோ நகர்கிறது படம்.

இப்படியெல்லாம் ஒரு கிராமம் மாறினால் நன்றாக இருக்கும் என்ற ஒரு எண்ணத்துடன் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஆனால், அதை ஒரு படமாக நன்றாக கொடுக்க முடியாமல் தவித்திருக்கிறார்.
 

Tags: sandrithazh, jvr, harikumar

Share via: